வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:08:01 (05/01/2019)

பள்ளிச் சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட கொடூரம் - 16 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!

பள்ளிச் சிறுமிகளை வலுக்கட்டயாமாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 16 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 8-ம் மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி காணாமல் போய் உள்ளனர். இது குறித்து அவர்களின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் இரண்டு மாணவிகளும் வடலூரில் பெண்களை வைத்துபாலியல் தொழில் செய்து வரும் சதிஷ்குமார் (28) என்பவரிடம் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாணவிகளை போலீஸார் மீட்டு அவர்களை மகளிர் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு மாணவி திட்டக்குடியில் படித்தபோது அருகில் உள்ள பெட்டிக்கடைக்குச் செல்வது வழக்கம். அப்பொழுது கடை உரிமையாளர் தனலெட்சுமி, ஆசை வார்த்தைக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபட கூறியுள்ளார். மாணவி  மறுத்ததையும் கேட்காமல் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார். பின்னர் மேலும் ஒரு மாணவியை அழைத்து வா உன்னை விட்டு விடுகிறோம் என மிரட்டியுள்ளார். அந்த மாணவியும், வேறு ஒரு மாணவியை அழைத்து  வந்துள்ளார். பின்னர் தனலட்சுமி 2 பேரையும் தனது கணவர் செந்தில்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் ஆகியோருடன் பாலியல் உறவு கொள்ளச் செய்துள்ளார். தொடர்ந்து திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் (60) என்பவர் வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பியுள்ளார்.

மதபோதகர் அருள்தாஸ் மாணவிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார். பின்னர் லட்சுமி மாணவிகளை விருத்தாசலத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த கலா என்பவரிடம் ரூ 5,000-த்துக்கு விற்றுள்ளார். அவர் ஜெமீனா என்பவரிடம் ரூ 25,000-க்கு விற்றுள்ளார். ஜெமீனா மாணவிகளை வடலூரைச் சேர்ந்த சதிஷ்குமாரிடம் ரூ 25,000-க்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் சதிஷ்குமார் மாணவிகள் இருவரையும் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் எனப் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.  இந்த வழக்கில் திட்டக்குடி போலீஸார் மதபோதகர் அருள்தாஸ், லட்சுமி, கலா, ஜெமீனா, சதிஷ்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். இதனால் இந்த வழக்கு 2016-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு விசாணைக்கு மாற்றப்பட்டது.
 

கடலூர்

இதில்  வடலுர் சதீஷ்குமார், விருத்தாசலம் கலா, திட்டக்குடி தனலெட்சுமி, திட்டக்குடி அருள்தாஸ், விருத்தாசலம் ஸ்ரீதர்,  விருத்தாசலம் தமிழரசி, பண்ருட்டி மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் கிரிஜா (என்கிற) ராதா,  விருத்தாசலம் ஷர்மிளா பேகம்,  வடலூர் கவிதா, சேலம் அன்பழகன், அவரின் மனைவி அமுதா, திட்டக்குடி மோகன், திட்டக்குடி மதிவாணன், விருத்தாசலம்  அன்பு ( என்கிற) செல்வராஜ், நெல்லிக்குப்பம் ஆனந்தராஜ், விருத்தாசலம்  சுப்பிரமணியன், பண்ருட்டி ராதிகா  மற்றும்  கபிலன், ஜமீனா, செந்தில்குமார், நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் செந்தில்குமார், நம்மாழ்வார் ஆகிய 2 பேரும் உயிரிழந்து விட்டனர். குற்றவாளிகள் தமிழரசி, சதீஷ்குமார், கபிலன், ஜமீனா ஆகியோர்  தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லிங்கேஸ்வரன் பண்ருட்டி மகாலட்சுமியை விடுதலை செய்தார். மீதமுள்ள 16 பேரை குற்றவாளி என்று அறிவித்துள்ளார். மேலும், தீர்ப்பு வரும் 7-ம் தேதி வழங்கப்படும் என்றார். மேலும், அவர் தெரிவிக்கையில் சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி இதுபோல நடந்ததுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோல நடக்காமல் இருக்கக் கடுமையான தண்டனை வழங்கப்படும்'' என்றார்.