பிளாஸ்டிக் தடை... அதிரடியாகக் களம் இறங்கிய மாவட்ட ஆட்சியர் - மிரளும் கடைக்காரர்கள்! | Plastic product ban Thiruvallur district collector along with people enter the shop and inspected

வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (05/01/2019)

கடைசி தொடர்பு:08:52 (05/01/2019)

பிளாஸ்டிக் தடை... அதிரடியாகக் களம் இறங்கிய மாவட்ட ஆட்சியர் - மிரளும் கடைக்காரர்கள்!

14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதை வணிக நிறுவனங்கள் எந்தளவுக்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாகக் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார். 

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது தமிழக அரசு. கடைக்காரர்கள் சரியான முறையில் பிளாஸ்டிக் தடையைப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை பெரும்பாலான வணிக நிறுவனங்கள் கைவிட்டு, விற்பனை செய்யப்படும் பொருள்களுடன் துணிப் பையையும் வழங்குகின்றன. ஆனால், ஒன்றிரண்டு நிறுவனங்கள் கையிருப்பில் உள்ள பிளாஸ்டிக் பைகளிலேயே பொருள்களை வழங்கி வருகின்றன. 

இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி அதிரடியாகக் களமிறங்கி, பொதுமக்களில் ஒருவராகக் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியும், விற்பனை செய்தும் வந்த கடைக்காரர்களுக்கு இனி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆலோசனை வழங்கியும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்துவந்த 9 நிறுவனங்களுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் கூடுதலாக அபராதமும் விதித்துள்ளார். 

பிளாஸ்டிக் தடை

மேலும், அனைத்துப்பள்ளிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றிடுவோம் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரே நேரிடையாக அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் உறுதிமொழியும் எடுத்துள்ளார். இந்த நிகழ்வில், ஆசிரியர்கள், காவல்துறையினர், இதர அரசு அலுவலகத்தைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொள்ள வைத்து அவர்களையும் உறுதிமொழி எடுக்க வைத்துள்ளார். இதனால், கடைக்காரர்கள் கதி கலங்கியும், பொதுமக்கள் நம்ம கலெக்டராம்மா வராங்க என்று சொல்லி பாராட்டவும் செய்கின்றனர்.