வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (05/01/2019)

கடைசி தொடர்பு:13:01 (05/01/2019)

புதிய விருதுகளுடன் தொடங்கியது சென்னை புத்தகக் கண்காட்சி - முதல்வர் தொடங்கி வைத்தார்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின், வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்களுடன் நேற்று தொடங்கியது.

புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர்

கண்காட்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து, அரங்குகளையும் பார்வையிட்டார். துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்வி அமைச்சர். முனைவர்.வைகைச்செல்வன் கலந்துகொண்டார். இவ்விழாவுக்கு பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி தலைமைதாங்கினார்.

முதல்வர்

விழாவில் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி, ``பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டு பிள்ளைகளுக்கும் இளமையிலேயே ஊட்ட வேண்டும். ஒவ்வொருவரும் ஓராண்டு சராசரியாக 2,000 பக்கங்கள் படிக்க வேண்டுமென்று பன்னாட்டு கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. சிக்கல்களை எதிர்கொள்ளவும், சவால்களைச் சந்திக்கவும் புத்தக வாசிப்பு பெரும் துணையாகிறது. நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட, நூல்களைப் தேர்ந்தெடுப்பதற்கு அதிகநேரம் செலவிடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள் உங்கள் வாழ்க்கையே மாற்றி அமைக்கலாம். நூல்களைப் படித்து மேதையானவர்களைவிட நல்ல மனிதர்களானவர்கள் அதிகம்” என்று பேசினார்.

குப்புசாமி

பின்னர், தலைமைவுரையாற்றிய நல்லி குப்புசாமி, ``சென்னை புத்தகக் கண்காட்சி என்பது மாநகரின் முக்கியமான வருடாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்று. வாசகர் திருவிழா இக்கண்காட்சி. என்னதான் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்று வந்துவிட்டாலும் புத்தகங்களை வாசிப்பதை மக்கள் கைவிடவில்லை. தனியார் புத்தகக் கண்காட்சியாக இருந்தாலும் அரசாங்கத்தின் ஆதரவு போதிய அளவு இருக்கின்றது” என்றார்.

 

வைகைச் செல்வன்

சிறப்பு விருந்தினரான முனைவர் வைகைச் செல்வன் ``படிப்பு என்பதுதான் ஒருவருடைய அறிவுக்கண்ணைத் திறவுகோலாக திறக்கிறது. அறிவு உடையவர்கள்தான் எல்லாம் உடையவர்கள். மனம், உடல், அறிவு மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அறிவுதான் மூலமாகச் செயல்படுகிறது. ‘தோண்டத் தோண்ட தண்ணீர் வரும், படிக்க படிக்க அறிவு வரும்’ என்றார் வள்ளுவர். வாழ்க்கையைப் பற்றிய சந்தேகங்களுக்கு, வாழ்க்கையின் செம்மைக்கு, செழுமைக்கு நூல்களைப் படியுங்கள். நூல்களைப் படிக்கும்போது புதிய உலகைக் கண்டடைவீர்கள்” என்றார்.

புத்தக கண்காட்சி

இவ்விழாவில் சிறந்த பதிப்பாளர் விருது, சிறந்த விற்பனையாளர் விருது, சிறந்த நூலகர் விருது, சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது, சிறந்த தமிழறிஞர் விருது, முதன்முறையாகச் சிறந்த ஆங்கில பெண் எழுத்தாளர் விருது மற்றும் சிறந்த பெண் பதிப்பாளர் விருது ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார்.

இக்கண்காட்சியானது நேற்று (4-ம் தேதி) தொடங்கி வருகிற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும்; வார நாள்களில் 2 மணி முதல் 9 மணி வரையும் நடக்க இருக்கிறது.