வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (05/01/2019)

கடைசி தொடர்பு:11:50 (05/01/2019)

நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார்! - பறிபோன தர்மபுரி ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் உயிர்

நாட்றம்பள்ளியில் கார் கவிழ்ந்த விபத்தில், தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 ரஜினி மக்கள் மன்ற செயலாளர்

தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் மகேந்திரன் (52). இவர், சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார். மகேந்திரனுடன், தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளான அருண் (22), ராஜசேகர் (25), தமிழ் (24) ஆகியோர் உடன் சென்றிருந்தனர். காரை, டிரைவர் வெங்கடேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு, நள்ளிரவு சென்னையிலிருந்து தர்மபுரிக்கு திரும்பினர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகத்தில் வந்துள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த லஷ்மிபுரம் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கார் தலை குப்புறக் கவிழ்ந்ததில் மக்கள் மன்றச் செயலாளர் மகேந்திரன் உட்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக, இவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் உட்பட மற்ற நால்வருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் விபத்தில் மரணித்த செய்தியை அறிந்த ஒட்டுமொத்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சோளிங்கர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், ``மகேந்திரன் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியாகவும், துயரமாகவும் உள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் மதியழகன் உட்பட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றச் செயலாளர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.