விபூதி, சந்தனத்துடன் இந்துக் கோயில்களில் நாதஸ்வரக் கச்சேரி! - மதுரையைக் கலக்கும் இஸ்லாமியக் கலைஞர் | Nathaswara Kachcheri in Hindu temples! - This Islamic artist is one to watch out for

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (06/01/2019)

கடைசி தொடர்பு:12:33 (08/01/2019)

விபூதி, சந்தனத்துடன் இந்துக் கோயில்களில் நாதஸ்வரக் கச்சேரி! - மதுரையைக் கலக்கும் இஸ்லாமியக் கலைஞர்

எல்லா மதமும் பிடிக்கும் மதுரையில் ``இஸ்லாம் நாதஸ்வர கலைஞர்’ அசத்தல் !

விபூதி, சந்தனத்துடன் இந்துக் கோயில்களில் நாதஸ்வரக் கச்சேரி! - மதுரையைக் கலக்கும் இஸ்லாமியக் கலைஞர்

கோயில்களில் இறை பக்தியோடு விபூதி பட்டை அடித்து, சந்தனம், குங்குமம் வைத்து நாதஸ்வரம் வாசித்து மதுரையில் அசத்திவருகிறார் இஸ்லாமிய நாதஸ்வரக் கலைஞர் ஷேக் மஸ்தான்.

மதுரை ஷேக் மஸ்தான்

மதுரை இசைக் கல்லூரியில் நாதஸ்வரச் சிறப்பு நிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் ஷேக் மஸ்தானை விளாச்சேரி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். ``எனக்கு ஆந்திராவில் உள்ள கரவதி கிராமம்தான் பூர்வீகம். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தாலும், எங்கள் கிராமத்தில் இருக்கும் ராமர் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதுதான் எங்கள் பரம்பரைத் தொழில். பாட்டன், பூட்டன் என்று எல்லாரும் நாதஸ்வரக் கலைஞர்கள்தான். தொடர்ந்து நாங்கள் ராமர் கோயிலுக்கு நாதஸ்வரம் வாசித்து சேவை செய்ததால், 100 ஆண்டுகளுக்கு முன்னரே எங்கள் குடும்பத்துக்கு ஆந்திராவில் கோயில் நிலம் அரை ஏக்கர்  பரிசாக வழங்கப்பட்டது. எங்கள் குடும்பம் நாதஸ்வரக் குடும்பம் என்பதால், எனக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே நாதஸ்வரம் என்பது ரத்தத்தில் ஊறிவிட்டது. எங்கள் தாத்தா கோயிலில் வாசிக்க ஆரம்பித்துவிட்டார் என்றால், அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் கூட்டம் அதிக அளவு கூடிவிடுவார்களாம். பெரும் பணக்காரர்கள்கூட எங்கள் தாத்தா வாசிப்பைக் கேட்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொள்வார்களாம். தெய்வீகம் நிறைந்த கீர்த்தனையில் வாசிப்பை அசத்திடுவாராம்.

என் அப்பாவும் பெரும் நாதஸ்வர வித்வான். திருமணத்தில் வாசிப்பதற்கு கிராக்கி இருக்கும். அப்பா, எப்போது ஃப்ரியா இருக்காரோ... அந்தத் தேதியில் கல்யாணம் நடத்தியவர்களும் உண்டு. இப்படியான ஆர்வத்தில் என் வாழ்க்கையும் நாதஸ்வர இசையால் ஈர்க்கப்பெற்றது. பெரிய படிப்புகள் படிக்க வாய்ப்புகள் கிடைத்தும் நாதஸ்வரத்தில்தான் என் வாழ்க்கை பயணிக்கவேண்டும் என முடிவு செய்து. திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா யுனிவர்சிட்டியில் நாதஸ்வரக் கல்வியை இரண்டு ஆண்டுகள் கற்றேன். அதற்குப்பின் என் சித்தப்பாவிடம் நாதஸ்வரம் கற்றேன். இதுதவிர, திருச்சி ஸ்ரீரங்கத்தில் எனது உறவினர்கள் உள்ளனர். அவர்களோடு இணைந்து நாதஸ்வரப் பயிற்சிகள் மேற்கொண்டேன். அதற்குப்பின் நாதஸ்வரம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு போதுமான படிப்புகளையும் முடித்து மதுரை அரசு இசைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன். என்னிடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று தமிழகத்தில் உள்ள பல்வேறு இந்து அறநிலைத் துறையின்கீழ் உள்ள கோயில்களில் பணிசெய்து வருகின்றனர்.

மதுரை ஷேக் மஸ்தான் வாங்கிய சான்றிதழ்நாதஸ்வரத்தை முறையாகக் கற்று, சேவையாகவும் செய்கின்றனர். ஒழுக்கமாக நாதஸ்வரத்தைக் கற்று, தங்கள் வாழ்க்கையில் பெரும் நிலையையும் அடைந்துள்ளனர். நாதஸ்வரம் பயின்று பலரும் அரசு வேலைக்குச் சென்றது பெருமையளிக்கிறது. அந்தக் கலை, அவர்களோடு நின்றுவிடாமல் அவர்களிடமிருந்தும் பலரும் கற்று தங்கள் வாழ்க்கையைக் கவனித்துக்கொள்கின்றனர். இதனால் பலருக்கும் நாதஸ்வரம் கற்றுக்கொடுத்து  நல்வழிப்படுத்தியுள்ளோம் என்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. என்னுடைய கீர்த்தனைகள், தனியாக இருக்கும். அதை, என் சித்தப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். அது, மிகவும் ஆத்மார்த்தமாகவும் இருக்கும்.

கோயிலில் இறையருளைப் பெற்றுவிட்டோம் என்ற நிம்மதி, பக்தர்களுக்குக் கிடைக்கும்படியாக வாசிப்பேன். அதனால், அவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். குழப்பங்கள் நீங்கும். அவர்கள், சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான நிலைப்பாட்டை அளிக்கும். நான் இஸ்லாமியராக இருந்தாலும் கோயில்கள், புனித ஸ்தலங்களில் வாசிக்கும்போது விபூதி, சந்தனம், குங்குமம் அவசியம் வைத்துவிடுவேன். அப்படியாக வைக்கும்போது வாசிப்பது தன்னிறைவு அடைந்ததுபோல் இருக்கும். அதிலிருக்கும் வாசனைகூடப் புத்துணர்வை அளிக்கும். பார்க்கும் பார்வையாளார்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும். மற்றபடி, எப்போதும்போல ஓர் இஸ்லாமியராகத் தொழுகை செய்வேன். என் வீட்டு விருந்துக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று எல்லாத் தரப்பினரையும் அழைப்பேன். எந்த மதம், நல்லது சொன்னாலும் அதை எடுத்துக்கொள்வேன்.

நாதஸ்வரம் வாசித்ததன்மூலம் 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். பாரதி புரஸ்கார், சி.ஐ.ஐ எக்ஸலன்ட் அவார்டு, கலா சுடர் ஒளி, இன்டெக் சேப்டாப், நாதஸ்வர ஆச்சாரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளை வைத்துள்ளேன். என் சித்தப்பா ஷேக் சின்ன மெளலானா, மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவுதினத்தின்போது, அவரது மகளும், மறைந்த முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி முன்னிலையில் நாதஸ்வரம் வாசித்தார். அந்தச் சமயத்தில் நான் சிறுவனாக இருந்தாலும், அவருடன் பக்க வாத்தியம் வாசிக்கச் செல்வேன். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவியில் இருந்தபோது, ராஜ்பவனில் அவரைச் சந்திக்கச் சென்றேன்.

மதுரை ஷேக் மஸ்தான்

வெளியே உள்ள காவலர்கள் நாங்கள் வைத்திருந்த நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாங்கி மூட்டைகட்டி வைத்துவிட்டு அவரைப் பார்க்க அனுமதித்தனர். அவரிடம், நடந்ததைத் தெரிவித்தவுடன் காவலர்களையே இசைக்கருவிகளை எடுத்துவர உத்தரவிட்டார். பின்னர் நாங்கள் அவர் முன்னிலையில் வாசித்தோம். அரைமணி நேரத்துக்கு மேலாக எங்கள் வாசிப்பைப் பொறுமையாகக் கேட்டார். `என்னுடைய வேலைப் பளுவைக் குறைத்து என் மனதுக்கு உங்கள் இசை ஓய்வை அளித்தது. மிகவும் அருமையாக இருந்தது. உங்களுக்கு என்ன உதவியை நான் செய்யவேண்டும்' எனக் கேட்டார். பதிலுக்கு நாங்கள், `உங்களைப் பார்ப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி' எனத் தெரிவித்துவிட்டு வந்தோம்.

அவரைப் பார்த்த மகிழ்ச்சியின் விறுவிறுப்பிலிருந்து வெளியேவர ஒருவாரம் தேவைப்பட்டது. என் வீட்டுக்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக நாதஸ்வரம் கற்றுக்கொடுத்து வருகிறேன். தொடர்ந்து, விரிவுரையாளராகப் பணியாற்றி கோயில் நிகழ்ச்சி உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் வாசிக்கிறேன். ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டதால், விரதமிருந்து கேரள ஐயப்பன் கோயிலுக்கு 5 முறை மாலை போட்டு சென்றுள்ளேன். எனக்குத் தெரிந்த கலையை ஆர்வமுள்ள நபர்களுக்குக் கற்றுத்தர முயல்கிறேன். நாதஸ்வர தொழிலை ஒழுக்கத்தோடு கொண்டுசென்ற 99 சதவிகித நபர்களுக்கு நல்வழிதான் கிடைத்துள்ளது. அதனால், இசைக்கல்லூரியில் மாணவர்கள் படிக்க வேண்டும். 

10-ம் வகுப்புக்குக் குறைவாகப் படித்த நபர்களை இசைக்கல்லூரியில் சேர்ந்து படிக்க அரசு அனுமதித்தது. தற்போது 4 வருடமாக அது மாறி, 10-வது அவசியம் என்றாகிவிட்டது. இதனால் பல ஆர்வமுடைய மாணவர்கள் இசையைக் கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. சேர்க்கை விகிதம் 50 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே, அவர்களுக்குச் சான்றிதழ் கல்வி வழங்காவிட்டாலும்  படிக்க மட்டுமாவது அனுமதிக்க வேண்டும். அதனால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்றார், மிகத்தெளிவாக.

இஸ்லாமியராக இருந்து இந்து முறைப்படி நாதஸ்வரம் கற்று, பலருக்கும் அதே கலையைக் கற்றுத்தரும் இவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. இவரது சேவை இஸ்லாமிய மக்களுக்குப் பெருமைப்பட வைப்பதாக ஷேக் மஸ்தானின் இஸ்லாம் நண்பர்கள் தெரிவித்தனர்.


டிரெண்டிங் @ விகடன்