வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:16:24 (05/01/2019)

ரூ.30-க்கு ஆசைப்பட்டதால் ரூ.200 அபராதம்- வசைபாடிய பெண்... பளார் விட்ட கண்டக்டர்!

பஸ் கண்டக்டர் ஒருவர், பேருந்தில் பயணம்செய்த பெண் பயணியை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அந்தப் பயணியைத் தாக்கிய கண்டக்டர் பூமிநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது...

கண்டக்டருடன் தகராறு செய்யும் பெண் பயணி


“நேற்று மதியம், சிவகங்கையில் இருந்து இளையான்குடி வரை செல்லும் பஸ் போய்க்கொண்டிருந்தது. சாத்தரசன்கோட்டை என்கிற இடத்தில் லெட்சுமி என்கிற பெண் குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண் டிக்கெட் எடுக்கவில்லை. பஸ் சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறிவிட்டார்கள். பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருந்தது. அந்தப் பெண்ணிடம் டிக்கெட் இல்லை. உடனே பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார். அந்தப் பெண் என்னிடம் பணம் இல்லை. இளையான்குடி வந்து ஏடிஎம்-மில் பணம் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார். பஸ் இளையான்குடி பஸ் ஸ்டாண்டு வந்ததும் அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டதற்கு, 'கொடுக்க முடியாது' என்று சொன்னார். 'ஏம்மா நீ அப்பவே பணம் இல்லைனு சொல்லியிருந்தா அப்பவே பரிசோதகர்கள் போலீஸ் ஸ்டேஷனில் இறக்கிவிட்டிருப்பார்கள். பிறகு ஏன் இளையான்குடி வந்ததும் பணம் தர்றேன்னு சொன்னே... இப்ப நான் உனக்காக பணம் கட்டமுடியுமா'னு கேட்டேன்.

பேசிகிட்டு இருக்கும்போதே அந்த அம்மா கட்டைப் பை ஒன்றை கீழே வைத்திருந்தார். அதில் இருந்த செல்போனை நான் எடுத்துக்கொண்டு பணம் கொடுத்துட்டு இந்த போனை வாங்கிக்கோன்னு சொன்னேன். கொஞ்ச தூரம் போன அந்த பெண் திரும்ப வந்து, 200 ரூபாய் கொடுத்துவிட்டு போனை வாங்கிச்சென்றார். எந்தப் பிரச்னையும் இல்லை. இளையான்குடியில் சிவகங்கைக்கு அடுத்த ட்ரிப் போயிட்டு மாலை நான்கு மணிக்கு திரும்பவும் இளையான்குடிக்கு பஸ் வந்தபோது, அதே பெண்மணி வந்து, என்னைத் தகாத வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டினார். ஏம்மா நீ டிக்கெட் எடுக்கல அதுக்கு பணம் கொடுத்துட்ட. உனக்கும் எனக்கும் என்ன பிரச்னை இருக்குனு சொன்னாலும் விடாமல் என்னை திட்டுவதைப் பார்த்து, பக்கத்துல இருந்த பயணிகள் எல்லாம் அந்த பெண்ணை திட்டினாங்க. அப்படி இருந்தும் விடாம கேவலமாகப் பேசிக்கொண்டே இருந்தார். பிறகு என்மீது செருப்பு, கல் விட்டு எறிந்ததும், எனக்கு அவமானமா போயிருச்சு. ஒரு ஆம்பளை எவ்வளவுதான் பொறுமையாக மற்றவர்கள் மத்தியில் நிற்கமுடியும். அதான் கோபம் தாங்காமல் அந்த பெண்ணை அடித்துவிட்டேன். தற்போது நான், சிவகங்கை அரசு மருத்துவமனையில் தலையில் நெஞ்சில் அடிபட்ட காயத்துக்கு சிகிச்சைபெற்றுவருகிறேன்'' என்கிறார்.

பெண் பயணியை அடித்த கண்டக்டர்

இதுகுறித்து இளையான்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்திடம் பேசியபோது, கண்டக்டர்  பூமிநாதனும், லெட்சுமியும் புகார் கொடுத்திருக்கிறார்கள். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லெட்சுமி இளையான்குடி அரசு மருத்துவமனையிலும், பூமிநாதன் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்றார். 

சாத்தரசன்கோட்டையில் இருந்து இளையான்குடிக்கு ஒரு நபருக்கு 15 ரூபாய் டிக்கெட். அந்தப் பெண் தனது குழந்தையுடன் வந்ததால் 30 ரூபாய் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும். டிக்கெட் எடுக்காமல் பரிசோதகரிடம் சிக்கிக்கொண்டதால், ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டதோடு, போலீஸ் வரை சென்றுவிட்டது விவகாரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க