வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (05/01/2019)

`நான் மேஜர், காதலனுடன்தான் வாழ்வேன்!' - அழுது புரண்ட காதலி... பிரிக்க முயன்ற போலீஸ் #Kanyakumari

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரிய பெண்ணைப் பெற்றோருடன் காரில் அனுப்பிவைக்க முயன்றனர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள். காதலி அழுது புரண்டதால் இறுதியில் காதலனுடன் சேர்த்துவைக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் குளச்சலில் நடந்துள்ளது.

டயானா

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி விஜயராஜ் (35). அதே பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான டயானா என்பவரைக் கடந்த ஒன்பது வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் டயானா குடும்பத்தைவிட விஜயராஜ் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளார். இவர்களின் காதல் பெற்றோருக்குத் தெரிய வந்ததால் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு டயானாவின் பெற்றோர் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜயராஜ்

இருப்பினும் இருவரும் ரகசியமாக தங்களது காதலை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் டயானா வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கியுள்ளனர். இதை அறிந்த விஜயராஜ் மற்றும் டயானா கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் ஒட்டசேகர மங்கலம் பகுதிக்குச் சென்று ரகசியமாகப் பதிவு திருமணம் செய்துள்ளனர். அவர்கள் திருமணம் செய்துகொண்டதை மறைத்துவிட்டு தங்கள் வீடுகளில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜயராஜ் டயானாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த டயானாவின் தந்தை சூசையா, டயனாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வீட்டு சிறையில் வைத்துள்ளார்.

டயானா

இது குறித்து விஜயராஜ் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், தன் மனைவி டயானாவை அவரின் தந்தை அழைத்துச் சென்று வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டயானாவின் தந்தை சூசையா குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், போலி ஆவணங்கள் மூலம் தன் மகளை விஜயராஜ் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் விஜயராஜ் தன் மகளை மிரட்டி வருவதால், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

டயானா

குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹேமலதா விசாரணைக்காக விஜயராஜ் மற்றும் டயானாவை நேற்று மாலை அழைத்திருந்தார். போலீஸ் நடத்திய விசாரணையில், நான் விஜராஜுடன் வாழ்க்கை நடத்தியது உண்மைதான் என்றும் நான் மேஜர் அவருடன் செல்வேன் என்றும் உறுதியுடன் இருந்தார் டயானா. இதை ஏற்க மறுத்த டயானாவின் தந்தை, தன் மகளை தன்னுடன் திரும்ப அனுப்பி வைக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் பெண் போலீஸார், டயானாவை தனியாக அழைத்துச் சென்று பெற்றோருடன் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார், டயானாவை குண்டுகட்டாக காரில் ஏற்றிப் பெற்றோருடன் அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளனர்.

டயானா- விஜயராஜ்

டயானா சத்தம் போட்டு அலறி காரில் ஏற மறுத்து உருண்டு புரண்டார். இதைப் பார்த்த விஜயராஜும் அவரின் வழக்கறிஞரும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டனர். சுதாகரித்துக் கொண்ட போலீஸார், டயானாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் அறிவுறுத்தலின் பேரில் டயானாவை அவரின் காதலன் விஜயராஜுடன் அனைத்து மகளிர் காவலர்கள் அனுப்பிவைத்தனர்.