வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (05/01/2019)

கடைசி தொடர்பு:17:03 (05/01/2019)

"நம்மாழ்வார் வழியில் எங்க நாட்டுல இயற்கை விவசாயம் செய்யப்போறோம்!"- இத்தாலி தம்பதி உறுதி

நம்மாழ்வார் நினைவுநாள் விழாவில் அவரது சமாதியில், "நாங்களும் நம்மாழ்வார் சொன்ன கருத்துகளைப் பின்பற்றி, எங்க நாட்டில் இயற்கை விவசாயம் பண்ணப் போகிறோம்" என்று சூளுரைத்திருக்கிறது இத்தாலியைச் சேர்ந்த இளம் தம்பதி ஒன்று.

வானகத்தில் பியாத்ரோ,சார்லே மற்றும் மகன் ஜோசப்

கரூர் மாவட்டம், கடவூர் அருகே 66 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது, நம்மாழ்வார் நிரந்தரமாக விதையாக  விதைக்கப்பட்டிருக்கும் வானகம். இங்கே, சமீபத்தில் அவரின் 5-வது நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. 700-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் மற்றும் இன்னும் சில மாநிலங்களில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 'தமிழகம் பருவநிலை மாற்றத்தால் சந்தித்து வரும் புயல், வெள்ளம், வறட்சி என்ற மூன்று பேரிடர்களைக் களைவது எப்படி' என்று இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

 நம்மாழ்வார் பற்றி முதல்நாள் கேள்விப்பட்டதும், தங்கள் குழந்தை ஜோசப்போடு ஆர்வமாகக் கலந்துகொண்டனர், இத்தாலியைச் சேர்ந்த பியாத்ரோ, சார்லே இளம் தம்பதி. அதே கடவூர் ஒன்றியத்தில் உள்ள சேவாப்பூர் சேவா சங்கத்தில் இயங்கிவரும் பள்ளியில் மாணவர்களுக்கு நான்கு மாதங்கள் தங்கி விவசாயம் குறித்து பயிற்சி கொடுத்து சேவையாற்ற வந்து தங்கியிருக்கிறது இந்தத் தம்பதி. அப்போது, அங்குள்ள யாரோ சிலர் நம்மாழ்வார் பற்றியும், வானகம் பற்றியும் சொல்ல, ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அங்கே நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஆச்சர்யத்தோடு பார்த்து வியந்தது இந்தத் தம்பதி.

வானகத்தில் மகன் ஜோசப்போடு பியாத்ரோ

அதுபற்றி பியாத்ரோவிடம் பேசினோம். "நேத்துதான் நம்மாழ்வார் பத்தி எங்களுக்குத் தெரிய வந்துச்சு. இன்னைக்கு அவருக்கு நினைவுநாள் நிகழ்ச்சின்னு தெரிஞ்சதும், அவரைப் பத்தி இன்னும் கூடுதலா தெரிஞ்சுக்க இங்க வந்தோம். ஒரு தனிமனிதனின் கருத்துகள் அவர் இறந்தபிறகும், இவ்வளவு பேரைக்கூட வச்சுருக்கிறதைப் பார்த்து அசந்துபோயிட்டோம். அவரைப் பற்றி இங்குள்ள பலர் எங்ககிட்ட பல ஆச்சர்யத் தகவல்களைப் பகிர்ந்துகிட்டாங்க. அவரைப் பத்தி பல விசயங்களை தெரிஞ்சுக்கிட்டோம். இத்தாலியில் எங்க குடும்பம் விவசாயக் குடும்பம்தான். பால் பண்ணையும், ஆலிவ் மரங்கள் வளர்ப்பும்தான் எங்க குடும்பத் தொழில். நானும், ஜெர்மனியைச் சேர்ந்த சார்லேவும் லண்டன்ல படிச்சப்ப, காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்க ரெண்டு பேருக்கும் பொதுவா பிடிச்ச விஷயமா விவசாயம் இருந்ததால், இருவரும் காதலிச்சோம். விவசாயப் பொருள்கள் சார்ந்த ஒரு கம்பெனியில்தான் வேலைபார்க்கிறோம். வருஷத்துக்கு நான்கு முறை இப்படி என்.ஜி.ஓ-க்கள் மூலமா விவசாயம் சார்ந்த சேவை பண்ண வருவோம். அப்படித்தான் சேவாப்பூர் வந்தோம்.

வானகத்தில் மகன் ஜோசப்போடு பியாத்ரோ...

நம்மாழ்வார் பற்றி தெரிஞ்சுக்கிட்டோம். இங்கே அடிக்கடி வந்து, விவசாயத்தில் அவர் சொன்ன கருத்துகளைப் பின்பற்றி, இத்தாலியில் நாங்க இயற்கை முறையில் விவசாயம் செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அவர் சொன்ன கருத்துகளில், 'வட்டார வகையறிந்து பயிர் பண்ணணும்'ங்கிற கருத்துபடி, எங்க மண்ணுக்கு என்ன பயிர் சிறப்பா வருமோ அதைக் கண்டறிந்து, இயற்கை விவசாயம் பண்ணப் போறோம். நம்மாழ்வார் பற்றி இத்தாலியில் அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் விவரிக்கப் போறோம். வி லைக் அண்ட் லவ் நம்மாழ்வார்" என்று நம்மாழ்வாரை உச்சிமுகர்ந்து முடித்தார்கள்.