``ஏதோ ஓர் இடத்தில் தவறு நடந்துள்ளது!’’ - ஸ்டாலினுக்குப் பதில் அளித்த விஜயபாஸ்கர் | Vijayabaskar explain about pregnant woman gives hiv infected blood

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (05/01/2019)

``ஏதோ ஓர் இடத்தில் தவறு நடந்துள்ளது!’’ - ஸ்டாலினுக்குப் பதில் அளித்த விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கடந்த 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. 

ஸ்டாலின்

இது குறித்து அவையில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், “சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் ரத்ததானம் செலுத்தியவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். விலை மதிக்க முடியாத ஓர் உயிர் பறிபோயுள்ளது. மேலும் ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. 

இந்த சர்ச்சைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், இதில் நான் கேள்விப்பட்டவரையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் மீது மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்'' எனக் கேள்வி எழுப்பினார்.

விஜயபாஸ்கர்


 
ஸ்டாலின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மத்திய அரசு அளித்த சாதனம் மூலம்தான் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டி ஏதோ ஓர் இடத்தில் தவறு நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.