வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (05/01/2019)

கடைசி தொடர்பு:17:13 (05/01/2019)

ஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா கடலூர் இளைஞர்? - புனேயில் நடந்த மர்ம மரணம்

பட்டியலின இளைஞர் பரந்தாமன், புனேயில் மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

பரந்தாமன்

இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் பேசுகையில், ``கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள இறையூர் கிராமத்தில் வசிப்பவர் சபாபதி. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சபாபதியின் மகன் பரந்தாமன் (26). கடந்த 8 மாதத்திற்கு முன்பு பரந்தாமனுக்கும் உசிலம்பட்டி அருகில் உள்ள முத்தையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கசாதி பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணத்துக்கு பெண் வீட்டாரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், பெண்ணின் தரப்பினர் தனது மகளைப் பரந்தாமன் கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தனது மகள் 18 வயது பூர்த்தியடையாதவர் என்றும் வழக்குத் தொடுத்திருந்தார். போலீஸார் காதல் தம்பதியினரைத் தேடிஅலைந்தனர். பரந்தாமனின் தந்தை உள்ளிட்ட உறவினர்களைக் கைதுசெய்து சிறையிலும் அடைத்தனர்.

எவிடன்ஸ் கதிர்

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான தம்பதியினர், தாங்கள் இருவரும் மேஜர் என்று தெரிவித்தனர். ஆனால், பெண்ணின் தரப்பினர் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று பள்ளிக்கூட சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அந்தப் பெண்ணோ, நான் இதுவரை பள்ளிக்கூடமே சென்றதில்லை என்று தெரிவித்தார். அந்தப் பெண்ணின் ஆதார் அட்டையில் 18 வயது பூர்த்தியடைந்திருப்பது தெரிய வந்தது. ஆயினும், ஆவணங்கள் சரியில்லாததால் நீதிமன்றம் அந்தப் பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டது. இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட, மருத்துவப் பரிசோதனையில் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகத்துடன் அறிக்கை கொடுத்தனர். இதற்கிடையில், பரந்தாமன் நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டார்.

புனே

பரந்தாமன் 69 நாள் சிறைக்குப் பிறகு கடந்த மாதம் 25-ம் தேதி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2-ம் தேதி வரை உசிலம்பட்டி அருகில் சிந்துபட்டி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவந்திருக்கிறார். இதற்கிடையில், நேற்று காலை மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் ஒரு தனியார் விடுதியில் தூக்குமாட்டியவாறு பரந்தாமன் இறந்துகிடந்திருக்கிறார். இது, தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று பரந்தாமனின் தந்தை சபாபதி எங்களின் எவிடன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தார். புனேயில் உள்ள எவிடன்ஸ் அமைப்பின் தன்னார்வலர்கள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். தற்கொலைக்கு முன்பு, ஒரு தற்கொலைக் கடிதத்தையும் பரந்தாமன் எழுதி வைத்திருந்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பதிவுசெய்துவிட்டு, தனக்குப் பெண்ணின் குடும்பத்தால் ஏற்பட்ட மிரட்டல்களையும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் பதிவுசெய்திருக்கிறார்.

பரந்தாமன் கடிதம்

பரந்தாமனின் குடும்பத்தினர் என்னிடம் தொடர்புகொண்டு, இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சொன்னார். தற்போது, புனே அருகில் உள்ள அரசு மருத்துவனையில் உடற்கூராய்வு நடக்க இருக்கிறது. எவிடன்ஸ் அமைப்பு இதுகுறித்து களஆய்வு செய்துவருகிறது. பரந்தாமனையும் அவரது குடும்பத்தினரையும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் போலீஸாரும் கடுமையாக அச்றுத்தி இருக்கின்றனர். நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு காவல்நிலையத்திற்குச் சென்ற பரந்தாமன் மீது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கடந்த 4 மாத காலமாக பரந்தாமன் கடுமையான மனஉளைச்சலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகிவந்துள்ளார். ஆகவே, இது கொலையா... தற்கொலையா? என்பதை போலீஸார் விசாரணை செய்ய வேண்டும்.  எதுவாகினு,ம் அவரது மரணத்திற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர்தான் முக்கிய குற்றவாளி" என்று விவரித்தார். தொடர்ந்து, பரந்தாமனின் தற்கொலை முன்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதை விவரித்துக் கூறினார். 

பரந்தாமன் கடிதம்

பரந்தாமனின் தற்கொலைக் கடிதத்தின் முக்கியக் குறிப்புகள்

1. போலீஸார், 11.10.18 அன்று என்னை மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து காலை 10 மணியளவில் என்னைப் பிடித்தனர். ஆனால், என்னைத் தாமதமாகவே ரிமாண்ட் செய்தனர். அதுவரை காசிமாயன் மற்றும் முருகன் என்ற இருவர் என்னைக் காவல்நிலையத்தில் வந்து அடித்தனர்.

2. சிறையில் இருந்து டி.என்.ஏ பரிசோதனைக்குக் கொண்டுசெல்ல சிந்துபட்டி காவலர்கள் ராகவன் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லாமல் எனது மனைவியின் மாமன் சிவச்சந்திரன் (ஓட்டுநர்), காசிமாயன் ஆகிய இருவரிடமும் ஒப்படைத்தனர். அவர்கள், எனது டி-சர்ட்டை கிழித்தும், கன்னத்தில் அறைந்தும் துன்புறுத்தினர். அதன்பிறகே இவர்கள் என்னை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இதை வெளியில் சொன்னால், எனது தம்பியைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர்.

3. எனது மனைவியின் நெருங்கிய உறவினர், உசிலம்பட்டி எம்எல்ஏ. நீதிபதி அவர்கள் அவரின் அரசியல் செல்வாக்கை மருத்துவ பரிசோதனையில் 18 வயதாவதற்கு 4 மாதம் உள்ளது போல் தயார்செய்துவிட்டனர்.

4. எங்கள் காதல் கல்யாண விவகாரத்தில், எனது மனைவி தந்தை மற்றும் அண்ணன் வெண்டிமுத்து, மாமன்கள் காசிமாயன், சிவசந்திரன், சதீஸ், முருகன் ஆகியோர் எத்தனையோ முறை எனக்குக் கொலைமிரட்டல் விடுத்தனர்.

5. சிந்துபட்டி காவல்நிலைய ஆய்வாளர் அன்னமயில், திருமங்கலம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி ஆகிய இருவரும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். எனது மனைவியின் தந்தையிடம் பல லட்சங்கள் லஞ்சமாகப் பெற்றுள்ளனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க