வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (05/01/2019)

`சேலம் கலெக்டர் ரோஹிணி திரைத்துறையில் இருந்திருக்க வேண்டியவர்!’ - முத்தரசன் விமர்சனம்

முத்தரசன்

'சேலத்தாம்பட்டி ஏரிக்குள் வீட்டு வசதி வாரியத்தின்மூலம் வீடு கட்டுகிறார்கள். சேலம் கலெக்டர் ரோஹிணியிடம் கேட்டால், அது ஏரியா என்று நக்கலாகப் பதில் சொல்லுகிறார். ஐஏஎஸ் அதிகாரிகளை விமர்சனம் செய்யக் கூடாது. ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியரின் செயல்களையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, அவர் திரைப்படத் துறையிலும், சின்னத் திரையிலும் இருக்கவேண்டியவர் என்று நினைக்கத் தோன்றுகிறது’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறினார்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று சேலம் வந்திருந்தார். சேலம் டவுன் ரயில்வே நிலையம் எதிரே உள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய முத்தரசன், ''நல்ல திட்டங்கள் இருக்கும் என சட்டசபைக் கூட்டத்தை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது. அமைச்சர்களின் பதில்கள் திருப்தியாக இல்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. அவர்களின் பயிர்க்கடன், கல்விக்கடன், மகளிர் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும்.

சட்டசபையில், இதற்கு முதல்வர் எந்தப் பதிலும் சொல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது. கஜா புயல் பாதித்த பகுதிகளை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள், தமிழக அரசு சொல்லியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு தராமல் தமிழகத்தைப் புறக்கணிப்பதோடு வஞ்சிக்கிறது. 2019-ம் ஆண்டு, மோடியின் ஆட்சிக்கு விடைகொடுக்கும் ஆண்டு. 20 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாதபோது, திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏற்புடையது அல்ல. தேர்தல் நடத்தக் கூடாது என்று எங்க கட்சியைச் சேர்ந்த ராஜா, தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்ததோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு போட்டிருக்கிறார். அதையும் மீறி தேர்தல் நடந்தால், தி.மு.க வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார். தேர்தல் வரலாற்றில், திருவாரூர் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றதே இல்லை. தினகரன் நம்பிக்கை பலிக்காது. இந்தத் தொகுதி அரசியல் முதிர்ச்சி வாய்ந்த தொகுதி. 

சேலம் கலெக்டர் ரோஹிணி

நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஏரி, குளம், குட்டைகளில் வீடு கட்டக்கூடாது என்று உயர் நீதிமன்றம் சொல்லுகிறது. ஆனால், தமிழக அரசே சேலம் மாநகராட்சியை ஒட்டியுள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள சேலத்தாம்பட்டி ஏரிக்குள் வீட்டு வசதி வாரியத்தின்மூலம் வீடு கட்டுகிறார்கள். சேலம் கலெக்டர் ரோஹிணியிடம் கேட்டால்,`அது ஏரியா?’ என்று நக்கலாகப் பதில் சொல்கிறார். ஐஏஎஸ் அதிகாரிகளை விமர்ச்சனம் செய்யக் கூடாது. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியரின் செயல்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, அவர் திரைப்படத் துறையிலும், சின்னத்திரையிலும் இருக்கவேண்டியவர் என்று நினைக்கத் தோன்றுகிறது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க