வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (06/01/2019)

கடைசி தொடர்பு:03:00 (06/01/2019)

‘வேலூர் மாவட்ட தி.மு.கவில் சாதி பாகுபாடு!’ -பறிக்கப்பட்ட நகரச் செயலாளர் பதவி

வேலூர் மாவட்ட தி.மு.கவில், சாதி அரசியல் பற்றி எரிகிறது. மாவட்ட செயலாளர் ஒருவர் சாதி ரீதியாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டிய நகரச் செயலாளரின் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க எம்.எல்.ஏ காந்தி

ராணிப்பேட்டையில் உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கடந்த 30-ம் தேதி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான காந்தி, கூட்டம் தொடங்குவதற்கு முன் ராணிப்பேட்டை நகரச் செயலாளர் பிஞ்சி பிரகாஷை தனியாக அழைத்துப் பேசினார். அப்போது, அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிஞ்சி பிரகாஷ், தாம் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, எம்.எல்.ஏ காந்தியின் முகத்தில் விட்டெறிந்தார். எம்.எல்.ஏ, அவரை அடிக்கப் பாய்ந்தார். ‘என்மேல் கை வைத்தால், தி.மு.க அலுவலகத்திலேயே தூக்குமாட்டி தற்கொலை செஞ்சிப்பேன்’ என்று கூறி எம்.எல்.ஏவை மிரளவைத்தார் நகரச் செயலாளர் பிஞ்சி பிரகாஷ்.

சாதி - நகர செயலாளர்

‘நான் பட்டியலினத்தவர். எம்.எல்.ஏ காந்தி நாயுடு என்பதால் சாதி பாகுபாடு பார்க்கிறார். நாயுடு சமூகத்தினரை மட்டுமே தனக்கு நெருக்கமாக வைத்திருக்கிறார். வன்னியர், முதலியார், பட்டியலினத்தவர் உட்பட மற்ற சமூக மக்களை, தள்ளியே பார்க்கிறார்’’ என்று அவர் பகிரங்கமாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, தனக்கு எதிராகச் செயல்படும் பிஞ்சி பிரகாஷை, நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க எம்.எல்.ஏ காந்தி தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில், ராணிப்பேட்டை நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து பிஞ்சி பிரகாஷ் இன்று நீக்கப்பட்டிருக்கிறார். இதனால், வேலூர் மாவட்ட தி.மு.கவில், சாதி ரீதியான பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

பிஞ்சி பிரகாஷ் பதவி பறிக்கப்பட்டதால், அவருக்கு ஆதரவாக உள்ள பட்டியலின சமூக நிர்வாகிகள் சிலவரையும் நீக்க எம்.எல்.ஏ முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ள எம்.எல்.ஏ காந்திக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் எம்.எல்.ஏ மீது தி.மு.கவினரே பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். கட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும், இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்க முடியாமல் மூத்த நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.