வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (06/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (06/01/2019)

ஊதியப் பிரச்னை... திடீர் நெருக்கடி... கோவை ஜொமேட்டோ ஊழியர்கள் போராட்டம்...!

கோவையில் ஊதியப் பிரச்னை காரணமாக ஜொமேட்டோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜொமேட்டோ

ஹோட்டல்களில் இருந்து உணவுகளை, டோர் டெலிவரி செய்யும் பணிகளில் ஸ்விக்கி, ஜொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இல்லாத சாலைகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. கவர்ச்சிகரமான ஊதியம் என்பதால், முழு நேரம், பகுதி நேரம் என்று ஏராளமானோர் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, ஊதியப் பிரச்னை காரணமாகச் சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த சில மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்விக்கி ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது கோவையில் ஜொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜொமேட்டோ  ஊழியர்கள், “கோவையில் முழு மற்றும் பகுதி நேரமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறோம். இதில், முழு நேரப் பணியாளர்கள் காலை 11 முதல் இரவு 11 மணிவரை வேலை செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு ரூ.400 ஊதியம் மற்றும் டெலிவரி ஒன்று ரூ.40 ஊக்கத்தொகை அளித்துவந்தனர்.

ஜொமேட்டோ

கோவையை எடுத்துக் கொண்டால் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ராமநாதபுரம் என்று தனித்தனி லிமிட்டாக பிரித்து டெலிவரி செய்து வந்தோம். ஆனால், திடீரென்று அந்த லிமிட்டை ரத்து செய்துவிட்டனர். மேலும், எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த  ஊக்கத்தொகையை ரூ.30 ஆகக் குறைத்துவிட்டனர். முன்பு ஆர்டர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊதியம் என்றிருந்த நிலையில், தற்போது ஆர்டர் எடுத்தால்தான் ஊதியம் என்று சொல்கின்றனர். இதையெல்லாம் மாற்றச் சொல்லி நிறுவனத்திடம் பலமுறை பேசினோம். அவர்கள் எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால்தான், போராட்டத்தில் இறங்கியுள்ளோம்” என்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  ஊழியர்களுடன் ஜொமேட்டோ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.