பினராயி விஜயன் உருவ பொம்மை எரிக்க முயற்சி - கோவை 'நாம் இந்து கட்சி' பிரமுகர்கள் கைது! | Naam Hindu party persons arrested in Coimbatore over Sabarimala issue

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (06/01/2019)

கடைசி தொடர்பு:01:00 (06/01/2019)

பினராயி விஜயன் உருவ பொம்மை எரிக்க முயற்சி - கோவை 'நாம் இந்து கட்சி' பிரமுகர்கள் கைது!

கோவையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற நாம் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகத் திருப்பியனுப்பப்பட்டனர். இந்நிலையில், பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பத்தை சாய்த்து, கொடியை எரித்தனர்.

நாம் இந்து கட்சி

இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே நாம் இந்துக்கள் கட்சி சார்பில் இன்று காலை கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கார்த்திக், இளைஞரணித் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், செயலாளர் கனகராஜ், இளைஞரணிச் செயலாளர் கௌதம் உள்ளிட்ட 8 பேரை சிங்காநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது ஐந்து  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.