வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (06/01/2019)

கடைசி தொடர்பு:12:22 (06/01/2019)

மறுசீராய்வு மனு விசாரணைக்கு வரும் வரை போராட்டம்! - சங் பரிவார் அமைப்புகள் முடிவு

சபரிமலை தீர்ப்பின் மறு சீராய்வு மனு விசாரணைக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி வரை கேரளத்தில் போராட்டம் நடத்த சங் பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை


சபரிமலை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து சங் பரிவார் அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றன. கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதல் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதற்கிடையில் சபரிமலையில் கடந்த 2-ம் தேதி 45 வயதிற்கும் குறைவான பிந்து மற்றும் கனக துர்கா ஆகியோர் சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து 3-ம் தேதி சங் பரிவார் ஆதரவோடு சபரிமலை கர்மசமிதி சார்பில் பந்த் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன, சி.பி.எம். அலுவலகங்கள் எரிக்கப்பட்டன.

போராட்டம்

தொடர்ந்து கேரளத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. பாலக்காடு, கண்ணூர் என மாறி மாறி 144 தடை உத்தரவு போடப்பட்டு வருகிறது. கேரளத்தில் நடந்த கலவரங்கள் குறித்து கவர்னர் சதாசிவம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இளம் பெண்களை சபரிமலையில் அனுமதிக்கும் தீர்பின் மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இளம் பெண்கள் சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட்டதால் வரும் 22-ம் தேதி நடக்கும் விசாரணையில் அதே தீர்ப்பை உறுதிப்படுத்த வாய்ப்பு உள்ளதாக போராட்டக்குழுவைச் சேர்ந்த ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

எனவே பெண்கள் சபரிமலையில் நுழைந்ததால் கேரளமே போர்க்களமாக மாறியுள்ளதாகக் காட்டும் வகையில் மறு சீராய்வு மனு விசாரணைக்கு வரும் ஜனவரி 22-ம் தேதிவரை போராட்டத்தைத் தொடர சங் பரிவார் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.