வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (06/01/2019)

கடைசி தொடர்பு:14:20 (06/01/2019)

பால் தாக்கரே மரணத்தின்போது பேருந்து சேதம் - திருப்பூர் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை!

பால் தாக்கரே மரணத்தின்போது அரசுப் பேருந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது திருப்பூர் நீதிமன்றம்.

திருப்பூர் இளைஞர்

கடந்த 2012-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அப்போது திருப்பூர் பூளவாடி பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேர் வேதாரண்யத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டு இருந்த அரசுப் பேருந்துமீது கல்வீசி சேதப்படுத்தியிருந்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் கார்த்திகேயன் அப்போது திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மகேஷ்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

திருப்பூர் இளைஞர்

அந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜியாவூதின், "பொது இடத்தில் தகராறு செய்தது. ஆபாசமான வார்த்தைகளால் திட்டியது மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது" உள்ளிட்ட குற்றத்துக்காக மகேஷ்குமார் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதனையடுத்து இருவரையும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.