வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (06/01/2019)

கடைசி தொடர்பு:14:50 (06/01/2019)

`டி.டி.வி தினகரனின் ஆர்.கே நகர் கதை திருவாரூரில் நடக்காது'- எம்.ஆர்.விஜயபாஸ்கர் காட்டம்!

'திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை பார்த்து அ.தி.மு.கவும், தி.மு.கவும் பயப்படுவதாக டி.டி.வி.தினகரன் சொல்லி இருக்கிறார். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து வெற்ற பெற்ற கதை திர்வாரூர் தொகுதி இடைத்தேர்தலில் நடக்காது' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காட்டமாக தெரிவித்தார்.

 எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.34 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பொங்கல் பரிசு வழங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ``திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். 

திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் யார்? என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தான் முடிவு செய்வார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலைப் பார்த்து தி.மு.கவும், அ.தி.மு.கவும் பயப்படுகின்றனர்' என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. அவர் எல்லா, இடைத் தேர்தலிலும் ஜெயித்து விடுவாரா?. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் நோட்டைக் காண்பித்து வெற்றி பெற்றார். 

டி டி வி தினகரன்

அது திருவாரூரில் நடக்காது. வரும் 8 மற்றும் 9 ம் தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், அண்ணா தொழிற்சங்கத்தில்தான் அதிக தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். அதனால், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் முழுமையாக வழங்கப்படும்" என்றார்.