வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (06/01/2019)

கடைசி தொடர்பு:17:30 (06/01/2019)

`சுத்திகிரிய பூஜை நடத்தியது ஏன்?’ - சபரிமலை தந்திரியிடம் விளக்கம் கேட்ட தேவசம்போர்டு

சபரிமலையில் பெண்கள் நுழைந்ததால் நடை அடைத்து சுத்திகிரிய பூஜை செய்தது குறித்து 14 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர் என்.வாசு உத்தரவிட்டுள்ளார்.

கண்டரரு ராஜீவரரு

சபரிமலையில் 45 வயதிற்கும் குறைவான பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் கடந்த 2-ம் தேதி வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு சுத்திகிரிய பூஜை நடத்தப்பட்டது. சுத்திகிரிய பூஜையை தந்திரி கண்டரரு ராஜீவரரு அறுவுறுத்தலின்படி மேல் சாந்தி செய்தார். இந்த பூஜை செய்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் இன்று சபரிமலையில் நடந்த தேவசம்போர்டு கூட்டத்தில்  தந்திரியிடம் விளக்கம் கேட்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவசம்போர்டு பிரஸ் மீட்

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு கூறுகையில், "சபரிமலையில் பெண்கள் சென்றதால் சுத்திகிரிய பூஜை செய்தது தவறானது. எல்லா பக்தர்களையும் ஒன்றாக பாவிக்கிறோம். யாரிடமும் வயது கேட்டு தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. பெண்கள் நுழைந்ததால் சுத்திகிரிய பூஜை நடத்திய தந்திரி கண்டரரு ராஜீவரரு 14 நாள்களுக்குள் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். சபரிமலை கோயில் தேவசம்போர்டுக்கு சொந்தமானது.

சபரிமலை

கோயில் நிர்வாக அதிகாரமும் தேவசம்போர்டுக்குத்தான் உள்ளது. சபரிமலையில் சுத்திகிரிய பூஜை நடத்தவேண்டுமானால் அதற்காக  தேவசம் போர்டிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்" என்றார்.