வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/01/2019)

கடைசி தொடர்பு:19:00 (06/01/2019)

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுக்கள்! - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது. 

உச்ச நீதிமன்றம்

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அதேபோல், கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக நிறைவுபெறாத நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன. 

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன்

தேர்தல் அறிவிப்பை அடுத்து அதற்கான வேலைகளில் தமிழக அரசியல் கட்சிகள் வேகம் காட்டத் தொடங்கிவிட்டன. அ.ம.மு.க சார்பில் எஸ்.காமராஜும், தி.மு.க சார்பில் பூண்டி கலைவாணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் நேர்காணல் முடிந்துள்ள நிலையில், நாளை வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இதனால், திருவாரூரில் அ.தி.மு.க - தி.மு.க - அ.ம.மு.க என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ்
 

இந்தநிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ரத்தினக்குமார் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. `கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில், அங்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்’ என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.