`மாணவர்களிடம் அரசியல் விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருகிறது!’ - மு.க.ஸ்டாலின் பெருமிதம் | political awareness increased among students, says DMK chief MK Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (06/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (06/01/2019)

`மாணவர்களிடம் அரசியல் விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருகிறது!’ - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மாணவ சமுதாயத்தினரிடம் அரசியல் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருவதால், தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சி பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த விழாவில் பேசினார். 

அரசியல் குறித்து பேசிய ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணி அறக்கட்டளை சார்பாக அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டந்தோறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புப் பெறுவார்கள். இந்த வருடத்துக்கான மாவட்டப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாநில அளவிலான போட்டிகள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. 

இரு தினங்கள் நடந்த போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் வெற்றியாளர்களாகத் தேர்வான மாணவர்களுக்கு இன்று நடந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். மூன்று போட்டிகளிலும் முதல் இடத்தைப் பிடித்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ.15,000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டிகளிலும் தலா 10 பேருக்கு ரூ.5,000 ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.

பேச்சுப் போட்டியில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்மதா முதல் பரிசையும் நெல்லையைச் சேர்ந்த கஸ்தூரி இரண்டாம் இடத்தையும் கோவையைச் சேர்ந்த பயாஸ் மூன்றாமிடமும் பிடித்தனர். கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் விஜயகாந்த், புதுச்சேரி வர்ஷா, திருவண்ணாமலை புவனகிரி ஆகியோர் வெற்றி பெற்றனர். கவிதைப் போட்டியில் திருவள்ளுர் தேவிஸ்ரீ, மதுரை சுவேதா, புதுக்கோட்டை லோகேஷ் ஆகியோர் பரிசுகளைப் பெற்றனர்.

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழாவில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ’’பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் பிறந்தநாளில் மாணவ சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப்  பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தக் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் நடந்த இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் பேசக்கூடாது 

ஆனால், இந்தக் காலத்தில் உள்ள மாணவர்கள் அரசியல் குறித்து அதிகம் தெரிந்து வைத்திருகிறார்கள். அரசியல் விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. அதனால் மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது நடக்கக்கூடிய ஆட்சி எந்தநிலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிகிறது. அதனால் அவர்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக முடிவு செய்வார்கள்’’ எனப் பேசினார். இந்த விழாவில், தி.மு.க நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், அப்துல்வாஹாப், சிவபத்மநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.