வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:00:30 (07/01/2019)

`வீட்டில் பயன்படுத்தும் குப்பைகளை உரமாக்கி செடி வளர்க்கப் போறோம்!’ - திருச்சி மாணவர்கள் நம்பிக்கை

தினமும் வீட்டில் பயன்படுத்தும் குப்பைகளை உரமாக மாற்றி, அதை வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு பயன்படுத்தப் போகிறோம் என நம்பிக்கையோடு சொல்கிறார்கள் திருச்சி பள்ளி மாணவர்கள்.

திருச்சி பள்ளி மாணவர்கள்

கடந்த 4-ம்தேதி முதல் மூன்று நாள்களாக, திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, திடக்கழிவு மேலாண்மை மற்றும் வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது சம்பந்தமாக நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட வந்த பள்ளி மாணவர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள்தான் இவை.

திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி, திருச்சி மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், தோட்டக்கலை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் தயாநிதி, பிரபாகரன் உள்ளிட்ட மற்றும் பலர் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டனர். தமிழகம் மட்டுமின்றி பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும் கலந்துகொண்ட நிறுவனங்கள் சார்பில்  50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. குப்பையை மறுசுழற்சி செய்வது, பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிகரான மாற்றுப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்தும், வீடுகள், வணிக நிறுவனங்கள், தினசரி உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க தேவையான உபகரணங்களான பையோ கேஸ் தயாரிக்கும் கருவிகள் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் கடைசி நாளான இன்று நேரில் பார்வையிட்டனர்.

திருச்சி பள்ளி மாணவர்கள்

கண்காட்சி துவங்கிய நாள் முதலே, திருச்சி மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், மாணவ மாணவிகள், வியாபார பெருமக்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். திருச்சி மாநகராட்சி நிர்வாகம், 50 கிலோவிற்கு மேல்குப்பைகள் உருவாகும் நிறுவனம் மற்றும் கடைகளிலிருந்து குப்பைகளை அவர்களே மறுசுழற்சி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலோ என்னவோ, திருச்சி வணிகர்களும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய உதவும் இந்தக் கண்காட்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

விடுமுறை நாளான இன்று திருச்சி மாநகராட்சி உள்ள சுப்பையா நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தனர். மாணவர்களுக்கு, மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகளின் தன்மைகள்  குறித்து விளக்கப்பட்டது. மேலும் வீட்டில் நாம் தினமும் பயன்படுத்தும் குப்பைகளை அப்படியே உரமாக்கிப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் குழந்தைகளுக்கு விளக்கும்போது, மாணவர்கள் மிக ஆர்வமாகக் கேட்டுக்கொண்டனர்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

கண்காட்சியைப் பார்வையிட்ட சுப்பையா  நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் பேசினோம், ``கண்காட்சி எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. பழைய பேப்பரில் செய்த பென்சில், கூடை, பழைய உடைந்த குடத்தில், பாத்திரங்களிலும் செடிகள் வளர்க்கலாம்னு இங்க வந்தபிறகுதான் தெரிந்துகொண்டோம். வீட்டில் செடி வளர்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை. நாங்கள் திருச்சி மாநகராட்சிக்குள் வாழ்வதால் இடப்பிரச்னை காரணமாக செடிகள் வளர்க்க முடியல. ஆனால் இங்கு வந்த பிறகு செடிகளை வளர்க்கப் பெரிய இடம் தேவையில்லை. சின்ன பை போதும்னு தெரியுது. வீட்டுக்குப் போனதும் இதைப் போல் செடிகள் வளர்க்க முடிவு செய்துள்ளோம். அப்படியே அம்மாக்கிட்ட பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை மக்க வைத்து அந்தச் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப் போகிறோம்’’ என்றார்கள் நம்பிக்கையுடன்.

கடைசியாக நம்மிடம் பேசிய யுவஶ்ரீ, ``எங்க வீட்டுக் குப்பைகளை உரமாக மாற்றி, அதை நான் வளர்க்கிற செடிக்கு பயன்படுத்தப் போகிறேன்’ என்றார். மாணவர்களின் வார்த்தைகளில் தெரிந்த நம்பிக்கை, நல்ல மாற்றத்துக்கான விதை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க