`அ.தி.மு.கவின் தலைமையை ஏற்கும் கட்சிதான் தமிழ்நாட்டில் வெல்லும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | ADMK will win in 2019 parliament elections, says Minister Rajendra balaji

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (06/01/2019)

கடைசி தொடர்பு:23:38 (06/01/2019)

`அ.தி.மு.கவின் தலைமையை ஏற்கும் கட்சிதான் தமிழ்நாட்டில் வெல்லும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.கவின் தலைமையை ஏற்கும் கட்சிதான் தமிழகத்தில் வெல்லும்  என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.

திருவில்லிபுத்தூரில் பயனாளிகளுக்கு பரிசுத்தொகுப்பை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``அ.தி.மு.கவுக்கு 46 வயது முடிந்திருக்கிறது. டி.டி.வி.தினகரனோ சிறு குழந்தை. அந்தக் குழந்தையைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். அ.தி.மு.கவை பார்த்துதான் மற்ற கட்சிகள் பயப்படுகின்றன. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்தத் தேர்தலைப் பார்த்தும் பயப்படாது. அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும்’’ என்றார்.

ராஜேந்திர பாலாஜி

திருவாரூர் இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்புக்கான காலதாமதம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ``பந்தயக் குதிரையை விடும்போது நல்ல குதிரையா என்பதைப் பார்த்து களத்தில் இறக்க வேண்டும். நாங்கள் சரியான நேரத்தில் வேட்பாளரை களம் இறக்குவோம். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல ஒன்றாக உள்ளனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அ.தி.மு.க தலைமையை ஏற்கும் கட்சியே தமிழ்நாட்டில் வெற்றி பெறும். இந்த கூட்டணியே மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும். தேர்தல் சம்பந்தமாக பா.ஜ.க, அ.தி.மு.க இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

ராஜேந்திர பாலாஜி

பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையே எந்த உறவுமில்லை. பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் வேறு வேறு. தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வரின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் கட்சியில் வேட்பாளர் இல்லை. அவர்களால் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்க முடியாது. கமல்ஹாசன் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் 15 பேர் மட்டுமே உள்ளனர். இந்திய அளவில் அ.தி.மு.கவுக்கு நிகரான கட்சி எதுவும் இல்லை. நடைமுறை வழக்கப்படி பெண்கள் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் செல்வதை தவிர்க்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு கோயிலுக்கு செல்வது நல்லதல்ல. இது தவறானது’’ என்றார்.