வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:10:31 (07/01/2019)

'செயலாகவும் மொழியாகவும் கலைஞர் இருக்கிறார்!' - திருப்பூர் விழாவில் வைரமுத்து உருக்கம்

'கலைஞர் கருணாநிதி, செயல் வடிவத்தில் ஸ்டாலினுக்குள்ளும், மொழி வடிவத்தில் கனிமொழிக்குள்ளும் உயிர்ப்புடன் இருக்கிறார்' என திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணர்ச்சிபொங்கப் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்து 

தமிழ் மொழியில் ஆளுமைகளாகத் திகழ்ந்த பிரபலங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம்செய்யும் விதமாக, 'தமிழாற்றுப்படை' என்கிற பெயரில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி அரங்கேற்றிவருகிறார் கவிஞர் வைரமுத்து. இதுவரைக்கும் தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஆண்டாள் உள்ளிட்ட 20 ஆளுமைகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கும் வைரமுத்து, தற்போது 21- வது கட்டுரையாக கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றி எழுதியுள்ளார். அக்கட்டுரையின் அரங்கேற்ற நிகழ்ச்சி, திருப்பூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சரவணன் மற்றும் முன்னாள் எம்.பி கனிமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள்.

முதலில் பேசிய கவிஞர் கனிமொழி, "என் தந்தை தலைவர் கலைஞர், தான் பெற்ற பிள்ளைகளைவிட அதிகமாக நேசித்தது கவிக்கோ அப்துல் ராகுமானையும், கவிஞர் வைரமுத்துவையும்தான். கலைஞர் இல்லாமல் வைரமுத்து வெளியிடப்போகும் நூல் தமிழாற்றுப்படையாகத்தான் இருக்கும் என்றார். இதை கேட்டுக்கொண்டுடிருந்தபோதே, வைரமுத்துவின் கண்கள் குளமாகிப்போனது. 

அதைத் தொடர்ந்து பேசவந்த வைரமுத்து, "தமிழாற்றுப்படையில் இன்னும்   மூன்று கட்டுரைகள் பாக்கி உள்ளன. அவற்றை எழுதி முடித்ததும், வெகு விரைவில் நூலாக வெளியிடுவேன்.  கலைஞர் இல்லாமல் வெளியிடப்போகும் முதல் நூலும் தமிழாற்றுப்படைதான். தமிழுக்கு மிகவும் ஆதரவாக இருந்த மனிதர் அவர். தான் வாழும்போது அனைத்து தமிழ்ச் சான்றோர்களையும் ஆதரித்து அரவணைத்த தலைவன் அவர். இதுவரைக்கும் நான் எழுதிய நூல்களை கலைஞரின் கரங்களில்தான் கொடுத்திருக்கிறேன். முதல்முறையாக இந்தமுறை, தமிழாற்றுப்படையின் முதல் பிரதியை அவரது காலடியில் வைத்து வணங்கிய பிறகே வெளியிடப்போகிறேன். கலைஞர் மறைந்துவிட்டார் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், அவர் செயல் வடிவத்தில் ஸ்டாலினுக்குள்ளும், மொழி வடிவத்தில் கனிமொழிக்குள்ளும் உயிர்ப்புடனேயே இருக்கிறார் என்றார்.