‘கேரளத்தில் சங்க பரிவாரின் எண்ணம் பலிக்காது’ - பினராயி விஜயன் ஆவேசம் | Sabarimala issue Planned violence by RSS, says Pinarayi Vijaya

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:09:55 (07/01/2019)

‘கேரளத்தில் சங்க பரிவாரின் எண்ணம் பலிக்காது’ - பினராயி விஜயன் ஆவேசம்

'கலவரம் செய்து கேரளத்தில் வேரூன்றலாம் என சங்க பரிவார் நினைக்கிறது. அதெல்லாம் இங்கு விலைபோகாது என்பதை பா.ஜ.க தலைமை உணர வேண்டும்' என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சபரிமலையில் பெண்கள் நுழைந்ததை பிரச்னையாக்கி, மாநிலம் முழுவதும் கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பொதுமக்களின் அமைதியைச் சீர்குலைக்கிறது. மத்திய அரசு தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி பயமுறுத்துகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கலவரங்கள் செய்கின்றன. மற்றபடி, கேரளத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. வழிபாட்டுத் தலங்களில் ஆணும் பெண்ணும் சமம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அரசு செயல்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் அரசை அவர்கள் மிரட்டுகிறார்கள்.

பந்த்

 

ஜனவரி 3-ம் தேதி, பந்த் என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதல்கள் நடந்தன. நூற்றுக்கும் அதிகமான அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. தனியார் வாகனங்கள், கடைகள், வீடுகள், சி.பி.எம் அலுவலகங்கள், கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டார்கள். அதனால், சரித்திரத்தில் முதன் முறையாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பை மீடியாவினர் புறக்கணித்துள்ளனர். 1800-க்கும் அதிகமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 700-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பந்த்

வட இந்தியாவைப் போன்ற தந்திரத்தை கேரளத்தில் கையாளலாம் என சங்க பரிவார் நினைக்கிறது. கேரளத்தில் அது நடக்காது. பிரிவினைவாதிகளை இரும்புக் கரம்கொண்டு அடக்குவோம். அக்கிரமங்களைத் தடுத்து, சமாதான நிலையை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அரசு வளைந்துகொடுக்காது. கலவரம் செய்து கேரளத்தில் வேரூன்றலாம் என சங்க பரிவார் நினைக்கிறது. அதெல்லாம் இங்கு விலைபோகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.