வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (07/01/2019)

கடைசி தொடர்பு:08:58 (07/01/2019)

“போனை எடுக்க முடியலை, அவ்ளோ பாராட்டு!” - நெகிழ்ந்துபோன அமைச்சர் கருப்பணன்

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு சர்வ கட்சியினர் முதற்கொண்டு, பலரும் எனக்கு போன் பண்ணி பாராட்டுகிறார்கள்” என ஈரோட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் பேசினார்.

 

கருப்பணன்

ஈரோடு மாவட்டம் பவானியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை, விலையில்லா பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கமாக ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கருப்பணன், “ஈரோடு மாவட்டத்தில் தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் என 7,01,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசு மற்றும் ரொக்கமாக தலா ரூ.1000 என மொத்தம் ரூ.70.12 கோடி வழங்கப்பட இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கருப்பணன், “ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அரசு ஏற்படுத்திய விழிப்பு உணர்வால், இன்றைக்குப் பொதுமக்கள் பிளாஸ்டிக் ஒழிப்புத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்து வருகிறார்கள். எனக்கு, தினமும் போனை எடுத்துப் பேச முடியலை. சர்வ கட்சிகள் முதற்கொண்டு பலரும் எனக்கு போன் போட்டு, ‘நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க. வாழ்த்துகள்’ன்னு பாராட்டுறாங்க” என உற்சாகமாகக் கூறினார்.