வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (07/01/2019)

கடைசி தொடர்பு:11:09 (07/01/2019)

`பூனை, ஆமை, நாலடியார்' -தமிழக அமைச்சர்களை கிண்டலடித்த தினகரன்

நெய்வேலி என்எல்சி நிறுவனம், மூன்றாவது சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு முதல் கம்மாபுரம் வரை 40 கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவுசெய்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசியல் கட்சியினரும் அவர்களுக்கு ஆதவராகப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

 தினகரன்

அ.ம.மு.க சார்பில் கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.  என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை என்பதால், அ.ம.மு.க கட்சியினர் மட்டும் இல்லாமல் சம்பந்தப்பட்ட  40 கிராமங்களில் இருந்தும் ஆண்களும் பெண்களும், கட்சி வித்தியாசம் இல்லாமல் 3 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் ஆர்ப்பாட்ட மேடை முன்பு கூடியிருந்தனர்.

இரவு 7.15 மணிக்கு மேடைக்கு வந்த தினகரன்,  என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். அப்பொழுது, தமிழக அமைச்சர்களைப் பூனை, ஆமை, நாலடியார், சரக்கு சண்முகம் என பட்டப் பெயர் வைத்து பேசினார். ``கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் பார்ப்பதற்கு பூனை போல இருப்பார். பூனை சம்பத், இந்த பூனையும்  பால் குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு நெய்வேலி என்எல்சி நிறுவத்திற்கு ஆதரவாகப்
பேசியுள்ளார்.

 விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். இவர் 24 மணி நேரமும் நிதானத்தில் இருப்பார். பக்கத்தில் பாண்டிச்சேரி இருப்பதால், 24 மணி நேரமும் பாண்டிச்சேரி நினைப்பில் சரக்கு சண்முகமாக உள்ளார். மோதாவி அமைச்சர் ஜெயக்குமார். இவர், தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். இவர் ஆமை. ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அதனால் இவரைப்
பார்த்தால் எல்லோரும் தலை தெறிக்க ஓடுவார்கள். நாலடியார் அமைச்சர் விஜயபாஸ்கர். கஜா புயல் விவகாரத்தில் சுவர் ஏறிக் குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ. எஸ். மணியன். இவரிடம் வேட்டி கட்டிக்கொண்டு எப்படி ஓடுவது என காவலர்கள் பயிற்சி எடுக்க உள்ளனர்” என தமிழக அமைச்சர்களைக் கலாய்த்த டி.டி.வி. தினகரன் பேச்சைக் கேட்டு பொது மக்கள் கைதட்டி ஆராவாரம்செய்தனர்.