வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (07/01/2019)

கடைசி தொடர்பு:11:10 (07/01/2019)

`வேலையை ஆரம்பித்தோம்; நீர் கிடைத்தது!' - காணாமல் போன கிணறுகளை மீட்டெடுக்கும் கரங்கள்

`என் கிணத்தைக் காணோம்' என்று வடிவேலு செல்லும்போது காமெடியாகத் தெரிந்தது. ஆனால், உண்மையிலேயே இன்று கிணறுகள் காணாமல் போய்விட்டன. கிணறு என்ற நீர்நிலை இருப்பதென்பதே அபூர்வமாகிவிட்ட நிலையில், இழந்துவரும் கிணறுகளை மீட்க முனைப்புடன் செயல்படுகிறது, 'தமிழன் பசுமைக் கரங்கள்' என்ற தன்னார்வ அமைப்பு. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சார்ந்த இவ்வமைப்பினர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கிணறு தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர்களைச் சந்தித்துப் பேசினோம். 

தோண்டப்பட்ட கிணறு

'தஞ்சாவூர் மாவட்டம், நீர் மேலாண்மையிலும் விவசாயத்திலும் மேம்பட்டது என்பதை நாம் அறிந்ததே. அப்படியிருக்கும் ஊரிலேயே நீர் பற்றாக்குறை என்றால் எவ்வளவு ஆச்சர்யம். சில நேரங்களில், பல அடிகளுக்கு போர் போட்டாலும் நீர் கிடைப்பதில்லை. இது ஒருபுறம் இருக்க, மறைந்த கிணறுகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். இப்போது பணியில் இருக்கும் திருப்பாலத்துறை பகுதி கிணற்று நீர், பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு, நெற்களஞ்சியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்துகிடக்கும் தோண்டும் மக்கள்

ஆரம்பிக்கும் முன் கிணற்று நீரெல்லாம் நல்லாயிருக்குமா என்றார்கள். எதுவாயிருந்தாலும் பரவாயில்லை, ஒரு கை பார்த்துவிடுவோம் என்று வேலையை ஆரம்பித்தோம். தோண்டிய சில அடிகளில் நீர் கிடைத்தது. இதைப் பயன்பாட்டிற்கேற்ப அடுத்த கட்டப் பணிகள் தொடர்ந்துவருகிறது. ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப முன்னோர்கள் செய்துவைத்த ஏற்பாடான இது, மகிழ்ச்சியாக உள்ளது' என்கிறார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லெனின். 

தோண்டப்படும் கிணறு

மேலும், 'இப்போது பணியிலிருக்கும் கோயில் கிணறுகூட முழுவதும் மூடப்பட்டு, வேறு கட்டுமானம் கட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது. அதை நாங்கள் கையிலெடுத்து, வெற்றிகரமாக கிணற்றைப் புத்துயிர் பெறவைத்துள்ளோம். எங்கள் பணியை கேள்விப்பட்டு பல தனிநபர்களும், ஊர்க்காரர்களும் அவர்களின் கிணற்றைத் தூர் வார அழைக்கிறார்கள். முதலில் எங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் பெரும்பாலும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், வேலையிலிருப்பவர்கள். ஆதலால், வார இறுதி நாள்களில் தூர் வாரும் பணிகளில் ஈடுபடுகிறோம். பொதுமக்களின் ஆதரவு பரவலாக உள்ளது. பெரும்பாலும் மாணவர்கள் என்பதால், நிதி சார்ந்த பற்றாக்குறையும் உள்ளது' என்கிறார்கள். 

தோண்டப்பட்ட கிணற்றில் தண்ணீர்

சுற்றுச்சூழல் சார்ந்து விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல், பொது நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்குதல், வாய்க்கால் மற்றும் இயற்கைப் பராமரிப்பு என்று 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பாபநாசம் பகுதியில், கடந்த 7 வருடங்களாக இயங்கிவருகிறது  'தமிழன் பசுமைக் கரங்கள்' அமைப்பு. மூன்றாம் உலகப் போர் நீருக்கானது என்று சொல்லும் அபாயகரமான சூழலில், நீர் சார்ந்த அனைத்து நிலைகளையும் மீட்டெடுக்கிறது இவர்களின் பசுமைக் கரங்கள்.