திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? | Tamilnadu political leaders opinion on cancels of Thiruvarur bypoll

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (07/01/2019)

கடைசி தொடர்பு:11:17 (07/01/2019)

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திருவாரூர் தொகுதி காலியானது. அங்கு, வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த டிசம்பர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி, வரும் ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியதால் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழிசை

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல்தான், தேர்தல் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை அறிக்கை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து,  ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதில் சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தேன். மேலும், திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலையை உருவாக்கிவிடும். அப்படிப்பட்ட மனநிலை, ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது. 

ஸ்டாலின்

தேர்தலில் வெற்றிபெறுவதைவிட, கஜா புயலால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிய நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது  என்பதுதான் தி.மு.க-வின் கருத்து. அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள். வருகின்ற நாடாளுமன்றத்  தேர்தலுடன் இணைத்து, 'மினி சட்டமன்றத்தேர்தல்' என்று சொல்லுமளவுக்கு 
காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேநாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தமிழகத்தில் மற்ற 19 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்தப்படுவதற்குக் காரணம் என்ன என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று தேர்தல் ஆணையமே தாமாக முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்துசெய்திருப்பதை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.