வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (07/01/2019)

கடைசி தொடர்பு:11:40 (07/01/2019)

`செல்வாக்கை இழந்துவிட்டீர்கள்!' - மோடிக்கு எதிராக அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா பேச்சு

 மோடி அரசுக்கு எதிரான தனது கருத்துகளுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பதாக உறுதியளித்துள்ளதாக, அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா கூறியிருப்பது, பா.ஜ.க-வுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அன்வர்ராஜா எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா எழுதிய, 'முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. டாக்டர் ஹாஜி எம்.ஓய்.முகமது சுஹைபு , ஹாஜி முகமது ரபீக் தலைமை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.ஹாஜா முயீனுத்தீன் பாகவி புத்தகத்தை வெளியிட்டார். ஏற்புரை ஆற்றிய தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, ''தேர்தல் களத்தில், குறிப்பிட்ட ஒரு சமுதாயம், ஒரு ஜாதி, ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் ஓட்டு போட்டு வெற்றிபெற முடியாது. அனைத்து சமுதாய மக்களும் ஓட்டு போட்டால்தான் ஜெயிக்க முடியும். மோடியைப் பிரதமர் ஆக்கியதும் அல்லாதான். மோடியால் முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடவைத்ததும் அல்லாதான். இந்தியாவில், ஒவ்வொரு மதத்திற்கென தனிச் சட்டம் உள்ளது போல, இஸ்லாமியருக்கும் தனிச் சட்டம் உள்ளது.

ஷரீயத்துக்கு எதிரான முத்தலாக் சட்ட மசோதாகுறித்து மக்களவையில் நான் பேசிய கருத்துகள் என் சொந்தக் கருத்தல்ல. தமிழக அரசின் நிலைப்பாட்டைத்தான் எடுத்துரைத்தேன். முத்தலாக் மசோதா தொடர்பாக மக்களவையில்  அன்றைய தினம் நான் கடைசியாகப் பேசிய 'ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால், கிராம மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால், நகர் மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள்.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால்  நாட்டின் ஒட்டுமொத்த  மக்களின் செல்வாக்கை இழந்துள்ளீர்கள். நீங்கள் (பா.ஜ.க அரசு ) கொண்டுவந்துள்ள முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. இறைவனுக்கு எதிரானது. இறைத் தண்டனையில் இருந்து தப்ப முடியாது' எனப் பேசியது  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 'முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல்' நூல் வெளியீட்டு விழாவில் பேசும் அன்வர்ராஜா

நான் எடுத்துரைத்த கருத்துகளுக்கு தமிழக அரசு  துணை நிற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.  என்னை எதிரியாக நினைப்பவர்களுக்கு நான் எதிரி அல்ல. எனக்குத் தீங்கு செய்தாலும் எந்த எதிர்வினையும் நான் செய்தது இல்லை. நான்  யாருக்கும் துரோகம் நினைத்ததுமில்லை.  துரோகம் செய்ததுமில்லை. அரசியலில்  என்னுடன் வந்தோர் எல்லாம் போய்விட்டனர்.  அரசியலில் நான் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக  நிலைத்து நிற்கிறேன். எனக்கு சரியெனத் தோன்றுவதைத்தான் செய்துவருகிறேன். தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் கிடைத்தாலும், என் வழிகாட்டுதல் இன்றி களப்பணி ஆற்ற முடியாது'' என ஆவேசமாக உரையாற்றினார்.

பி.ஜே.பி -க்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே திரைமறைவு உறவுகள் உருவாகி உள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகியும், மக்களவை உறுப்பினருமான அன்வர்ராஜா, அக்கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவருவது, பா.ஜ.க-வினர் இடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.