வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (07/01/2019)

கடைசி தொடர்பு:12:12 (07/01/2019)

`ராதாகிருஷ்ணனை இயக்குவது யார்?'- தலைமைச் செயலகத்தில் ஒன்றுகூடிய அ.தி.மு.க எம்பிக்கள்

``உலகத் தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வந்த ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முடியவில்லை. அதற்கு மறுப்பு தெரிவித்தது யார்?'' என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

சி.வி சண்முகம்

முன்னாள் முதல்வர் இறப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் கேள்விகள் தொடர்ந்து தமிழக அரசியலில் உலாவந்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், ``மருத்துவர்கள் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. ஆனால், அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார். ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் எனச் சொன்னது யார். மத்திய அரசு ஜெயலலிதாவுக்குத் தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஜெயலலிதாவின் உயிரைவிட, இந்திய மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்று கூறிய ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். 

ராதாகிருஷ்ணன்

இதையடுத்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம், பொதுவெளியில் அமைச்சர்கள் கூறும் இதுபோன்ற கருத்துகள் மனவேதனை அளிப்பதாகவும் இதைத் தடுக்கவேண்டும் எனவும் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தன. 

அதிமுக எம்.பி & எம்.எல்.ஏ

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னைத் தலைமைச் செயலகத்தில் அ.தி.மு.க நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் பேசும்போது, ``ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பான காரணத்தை வெளியிடலாமே தவிர அப்போலோவில் 1.17 கோடி ரூபாய் உணவுக்காகச் செலவிடப்பட்ட காரணத்தைத் தெரிவிக்க முடியாது. அதை மீடியாக்களும் பொதுமக்களும்தான் சசிகலா குடும்பத்தினரிடம் கேட்டு வெளியிட வேண்டும் என அ.தி.மு.க தொண்டர்கள் சார்பாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஜெயலலிதாவின் மருத்துவச் செலவை வேண்டுமானால் அ.தி.மு.க செலுத்தலாம். ஆனால் உணவுச் செலவை யார் செய்தார்கள், மருத்துவமனையில் என்ன நடந்தது போன்ற எந்தத் தகவலும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கோ, தொண்டர்களுக்கோ தெரியாது.

அதிமுக எம்.பி & எம்.எல்.ஏ

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த அனைத்து விஷயங்களையும் சசிகலா குடும்பம்தான் எங்களிடம் சொல்லாமல் மறைத்தது. ஜெயலலிதாவின் இறப்புக்கு ஒரு விடை கிடைக்க வேண்டும் எனில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறப்பு வரை அவர் உடன் இருந்த தமிழகச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாமாக முன்வந்து மக்கள் மன்றத்தில் கூறினால் மட்டுமே உண்மை தெரியவரும். இதுதான் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்தின் வாதமாகவும் இருந்தது. ராதாகிருஷ்ணனை யார் இயக்குகிறார்கள் என்பது நேற்று சேத்தியாத்தோப்பில் நடந்த அ.ம.மு.க கூட்டத்திலேயே தெரிந்துவிட்டது. உலகத் தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முடியவில்லை. அதற்கு மறுப்பு தெரிவித்தது யார் என்பதை ராதாகிருஷ்ணன் சொல்ல வேண்டும். மேலும் அவரின் பின் புலம் விசாரிக்கப்பட வேண்டும். அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டதுக்கு ராதாகிருஷ்ணன்தான் காரணம்” எனக் கடுமையாக விமர்சித்தனர்.