அமெரிக்க பத்திரிகையாளரைச் சந்தித்த விவகாரம்! - நித்தியானந்த் ஜெயராமன் விசாரணைக்கு ஆஜர் | The issue of meeting with American journalists nithyanandh jeyaraman came to dsp office

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:14:00 (07/01/2019)

அமெரிக்க பத்திரிகையாளரைச் சந்தித்த விவகாரம்! - நித்தியானந்த் ஜெயராமன் விசாரணைக்கு ஆஜர்

தூத்துக்குடிக்கு வந்த அமெரிக்க பத்திரிகையாளர் சியல்லோ மார்க்கை சந்தித்தது தொடர்பாக போலீஸார் அனுப்பிய சம்மனுக்கு, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் இன்று ஆஜரானார்.

சமூக ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர்களை சந்திப்பதற்காக, கடந்த டிசம்பர் 28-ம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த சியல்லோ மார்க் தூத்துக்குடிக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டர். பின்னர், சுற்றுலா விசாவில் வந்த அவர், விதிகளை மீறி செயல்பட்ட அவரை போலீஸார் கடந்த ஜனவரி 1-ம் தேதி அமெரிக்காவுக்கே மீண்டும் திருப்பி அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், அவர் சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு, அவருக்கு மொழிபெயர்ப்புக்காக உதவிய பிரின்ஸ், மீனவ சங்கத்தைச் சேர்ந்த ரீகன், வணிகர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா ஆகிய நான்கு பேருக்கு சம்மன் அனுப்பி, போலீஸார் விசாரணை செய்தனர். அதேபோல, சமூக ஆர்வலரான நித்தியானந்த் ஜெயராமுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வந்தார் நித்தியானந்த் ஜெயராமன்.

அமெரிக்க பத்திரிகையாளர் சியல்லோ மார்க்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த மாதம் அமெரிக்க பத்திரிகையாளர் மார்க், தூத்துக்குடிக்கு வந்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலை  சம்பந்தமாகக் கட்டுரை எழுத தகவல்கள் சேகரிப்பதற்காக வந்தவரிடம் போலீஸர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், எனக்கு இன்று ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில் ஆஜராக வந்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலை சட்ட மீறல்கள் குறித்து, கடந்த 10 ஆண்டு காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதற்கான சட்ட மற்றும் அறிவியல் ரீதியான ஆதரவைத் திரட்டி வருகிறோம்.  வழக்கு, நாளை (8-ம்  தேதி) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில், தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து விவாதிக்கப்படும். இருப்பினும், இதுகுறித்து உடனடியாக முடிவு வராது. ஸ்டெர்லைட் ஆலைமீது ஏகப்பட்ட சட்டமீறல்கள் உள்ளதால், ஆலை மீண்டும்  திறக்கப்பட  வாய்ப்புகள் இல்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க