வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (07/01/2019)

"தேர்தல் ஆணையம் பி.ஜே.பி ஆணையமாகச் செயல்படுகிறது" -தங்க தமிழ்ச்செல்வன்

 தேர்தல் ஆணையம்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 28-ம் தேதி நடைபெறும்  என்று  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும்  பணியில் தீவிரம் காட்டிவந்தன. இந்த நிலையில், திடீரென திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக, தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதில், 'மாநிலத் தேர்தல் ஆணையமும், மாவட்ட அதிகாரிகளும் இடைத்தேர்தல் தொடர்பாக எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்படுவதாகவும், இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறும் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, சில அரசியல் கட்சிகள் ஆதரவும், சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றன.

தங்க தமிழ்ச்செல்வன்

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, "கஜா புயலை காரணம் காட்டி தேர்தலை நிறுத்தியுள்ளது, தேர்தல் ஆணையம். இதற்கு முன்பு,  தேர்தல் ஆணையத்திடம்  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்,  தமிழகத்தின்  நிலைகுறித்து  கூறவில்லையா அல்லது அந்த மாவட்ட கலெக்டர்தான் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லையா அல்லது தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உரிய ஆய்வுகளை நடத்தவில்லையா? எனவே, இந்தத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் பின்னணி உள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் நடைமுறை. மாநில அரசு  மற்றும்  மாவட்ட ஆட்சியர்கள் அதுகுறித்த அறிக்கை தரவேண்டும் என்ற நடைமுறை  இருக்கிறது. இவையெல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா... திடீரென கஜா புயலைக் காரணம்காட்டி  நிறுத்தியுள்ளார்கள்.

கஜா புயல் வந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கான நிவராணத் தொகையை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டோக்கன்களாக  வழங்கி கொடுக்கப்போகிறார்கள். தேர்தல் பூத் சென்டர்களும், நிவாரண முகாம்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது. இரண்டுமே தனித் தனியாகச் செயல்பட உள்ள  நிலையில், திடீரென தேர்தலை ஏன் ரத்து செய்ய வேண்டும். திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகளுக்குப் பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே, இந்தத் தேர்தலை ரத்துசெய்ய வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் பி.ஜே.பி ஆணையமாகச் செயல்படும்போது எப்படி இந்தத் தேர்தலை நடத்துவார்கள். அவர்கள் சௌகரியத்துக்கு ஏற்றவாறுதான்  தேர்தலை நடத்துவர்கள்"  என்றார்.