வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (07/01/2019)

கடைசி தொடர்பு:17:45 (07/01/2019)

பயிரை அழித்து சாலையில் மணல் நிரப்பிய அதிகாரிகள்! - விரட்டியடித்த விவசாயிகள்

வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் அதிகாரிகளைக் கண்டித்தும் வயலில் மண்ணைப்போட்டு மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணியாளர்களை விவசாயிகள் விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட விவசாயிகள்

பெரம்பலூர் மாவட்டம் அருகே பெருமத்தூர் குடிக்காடு மற்றும் கார்குடியைக் கிராமத்தை இணைக்கும் இரண்டு கிலோமீட்டர் தார்ச்சாலை உள்ளது. இச்சாலை பழுது அடைந்ததால் குன்னம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தார்ச்சாலை அகலப்படுத்தும் பணி 10 நாள்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை சாலையோரம் மலை நீர் வடிகால்வாய் அமைப்பதற்காகப் பொக்லைன் இயந்திரத்துடன் சரிசெய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலையோரம் உள்ள அறுவடைக்குத் தயாராக உள்ள மக்காச்சோளத்தில் பொக்லைன் இயந்திரத்தை 8 மீட்டர் தூரத்துக்கு இறக்கி மண்ணைப் போட்டு நிரப்பியுள்ளனர். 

மக்காசோளம்

மக்காச்சோள வயல்களில் மண் நிரப்பிக்கொண்டிருக்கிற தகவல் அறிந்து விவசாயிகள் பதறி வந்து பொக்லைன் இயந்திரம் டிரைவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், எதுவென்றாலும் வி.ஏ.ஓ-வைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறி பணிகளைச் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணிகளை இனி செய்ய விடமாட்டோம் என்று அவர்களை விரட்டி அடித்தனர். 

பயிரப்பட்டுள்ள மக்காசோளம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ``எந்த அதிகாரிகளாவது இரண்டு, மூன்று நாள்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் சோளத்தை அழித்து ரோடு போடுகிறார்கள். இந்த அதிகாரிகள் மனது என்ன கல்லா. மக்காச் சோளம் பயிர் வயலில் மண்ணைப் போட்டு மூடி எங்கள் சாப்பாட்டுத் தட்டில் மண்ணைப் போடுவதற்குச் சமம். இதற்கு இந்த அதிகாரிகள் எங்களிடம் மன்னிப்புக்கேட்டு அதற்கு உண்டான நஷ்டஈடு வழங்க வேண்டும். இல்லையேல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தனர்.