வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (07/01/2019)

மீண்டும் டாஸ்மாக்! - ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டுகளை வீசியெறிந்த சாமளாபுரம் மக்கள்

 டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் மக்கள் போராட்டம்

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டுகளை வீசியெறிந்து நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களிலேயே, பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டம்தான். தங்களது பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அமைக்கக் கூடாது எனச் சாமளாபுரம் மக்கள் நாள் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட, கொதித்துப்போன காவல்துறை வன்முறை வெறியாட்டத்தை நடத்தி அம்மக்களை சிதறியடித்து ஓட வைத்தது. `அமைதி வழியில் போராடிய எங்கள்மீது ஏன் தடியடி நடத்துகிறீர்கள்' எனக் கேட்ட சில தாய்மார்களின் கன்னத்திலும் பளார் என ஒரு அறைவிட்டார் காவல்துறை அதிகாரி.

இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிவிட, பின்னர் சுதாரித்துக்கொண்ட தமிழக அரசு இனி சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையே அமைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் அதே சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முயன்று வருவதாகத் தகவல் பரவியதால், கொதித்தெழுந்த அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் தங்களது ஆதார் கார்டுகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாகப் பேசிய அப்பகுதி மக்கள், ``ஏற்கெனவே மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தி எங்களது பேரூராட்சிப் பகுதிகளுக்குள் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவிடாமல் செய்திருந்தோம். எங்கள் ஊர் மக்களின் ஒற்றுமையையும், எங்களது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களையும் பார்த்து, இனி எங்களது பகுதியில் டாஸ்மாக் கடையே வராது என்றும் உறுதியளித்திருந்தார்கள். ஆனால், இப்போது வருடங்கள் கழிந்ததும் பழையபடி மீண்டும் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு ஆயத்தமாகிறது அரசு. அதுவும் விவசாய நிலத்தில் கடையைத் திறப்பதற்கு ஏற்பாடாகி வருகிறது. மேலும், அப்பகுதிக்கு அருகிலேயே பிரசித்திபெற்ற குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலும் அமைந்திருக்கிறது. இதனால் அக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இனி எங்கள் ஊரில் ஒருபோதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே, எங்களது உணர்வைப் புரிந்துகொண்டு, மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுத்து சாமளாபுரம் பேரூராட்சிக்குள் டாஸ்மாக் கடைகளை வரவிடாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்தப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியரகம் சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.