வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (07/01/2019)

கடைசி தொடர்பு:18:45 (07/01/2019)

`எங்க தூக்கமே போச்சு!’ - தனியார் ஆலைக்கு எதிராக விவசாயிகள் புகார்

விருதுநகர் மாவட்டம், முத்துச்சிவலிங்கபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் செயல்பட்டு தனியார் மணல் அரைப்பு (எம் சாண்ட்) நிறுவனத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள்

இதுதொடர்பாக முத்துச்சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் என்ற விவசாயி கூறும்போது, முத்துச்சிவலிங்கபுரம் அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மணல் அரைப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வலையபட்டி, கீழவலையபட்டி ஆகிய கிராமங்கள் அருகே உள்ளன. இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் அதிகளவிலான தூசிகள் விளைநிலங்களில் படிந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிகளவு உப்பு வைத்து வெடிப்பதால் அதிக சத்தம் மற்றும் அதிக மாசு உண்டாகிறது. மேலும், இரவு முழுவதும் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் 6 மாதமாக எங்களுக்குத் தூக்கமே போய்விட்டது.

நிறுவனத்தின் அருகே உள்ள சிற்றோடைகள் மற்றும் ஊரணிகளில் மண்களைக் குவித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாகத் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுசம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. எங்கள் பகுதி முழுவதும் பருத்தி, சோளம், கம்பு போன்ற மானாவரி பயிர்களை நம்பியுள்ளோம். ஆனால், தற்போது இயங்கும் இந்த ஆலையால் இருக்கும் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே, மணல் அரைப்பு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற போராடுவதைத் தவிர வேறு வழியில்லை'' எனத் தெரிவித்தார். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.