வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:19:00 (07/01/2019)

`மலிவு விலையில் அரசாங்கமே துணிப்பை கொடுக்கலாம்!’ - நடிகை விஜி சந்திரசேகர்

`` 'துணிப்பைகள் விலை அதிகமா இருக்கு'ன்னு கஷ்டப்படுற குடும்பத்துப் பெண்கள் சிலர் வருத்தப்படறதைப் பார்க்கிறேன். ரீசைக்கிள் பிளாஸ்டிக் பொருள்களை எங்கே கொடுக்கிறதுன்னு தெரியலை'ன்னும் சில பெண்கள் சொல்றாங்க.''

வீட்டுக்கான காய்கறிகள் முதல் சமையல் எண்ணெய் வரைக்கும் சொந்தமாக பயிரிட்டுச் சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவர் நடிகை விஜி சந்திரசேகர். தன் வீட்டு பிளாஸ்டிக் தடை பற்றிப் பகிர்ந்துகொண்டார். 

விஜி சந்திரசேகர்

``25 வருடங்களுக்கு முன்னாடி பிளாஸ்டிக் இல்லாமல்தானே நாமெல்லாம் வாழ்ந்தோம். அதனால் மறுபடியும் அப்படியே வாழ  ஆரம்பிக்கலாமே... செயற்கை உரம், பூமி சூடேறுதல், பிளாஸ்டிக் கழிவுகளால் மண் மாசடைதல்னு நம்முடைய சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி வைச்சதோட பலன், இன்னிக்கு 50 வயதுக்கு மேலே வாழ்வது என்பது போனஸ் மாதிரி ஆயிடுச்சு'' என்று குறைபட்டுக் கொண்டவர்,  தன் வீட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்த விதத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். 

``எங்க வீட்டில் கடந்த ஒரு வருஷமாகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை மெல்ல மெல்லக் குறைக்க ஆரம்பிச்சுட்டேன். அதிலும் ரீ சைக்கிள் செய்ய முடியாத மெல்லிய பாலிதீன் கவர்களை சுத்தமா அவாய்டு பண்ணிட்டேன். குப்பைப் போடற பாக்ஸ்க்குள்ளக்கூட நியூஸ் பேப்பரை சுருள் மாதிரி வைச்சு, அதுக்கு மேலேதான் குப்பைக் கொட்டுறேன்.  என் ஒரு வீட்டில், வெறும் குப்பைத் தொட்டிக்குள் போடுவதில் மட்டுமே, ஒரு மாசத்துக்கு 30 பிளாஸ்டிக் கவர் யூஸ் பண்ணா, மொத்த தமிழ்நாட்டிலும் எவ்வளவு பிளாஸ்டிக் கவர் தேவைப்படும் பாருங்க. யோசித்துப் பார்த்து பயந்துபோய்தான், ஒரு மாசத்துக்கு முன்னாடியே பேப்பர் பேக், துணிப்பை என்று மாறிவிட்டேன்'' என்றவர்,  தமிழக அரசிடம் இரண்டு கோரிக்கைகளையும் வைத்தார். 

பிளாஸ்டிக் தடை

`துணிப்பைகள் விலை அதிகமா இருக்கு'ன்னு கஷ்டப்படுற குடும்பத்துப் பெண்கள் சிலர் வருத்தப்படறதைப் பார்க்கிறேன். அவங்களுக்கு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரசாங்கமே துணிப்பைகள் தரலாம். 'ரீ சைக்கிள் பிளாஸ்டிக் பொருள்களை எங்கே கொடுக்கிறதுன்னு தெரியலை'ன்னும் சில பெண்கள் சொல்றாங்க. ஸோ, வீடுகளுக்கு வந்து ரீ சைக்கிள் பிளாஸ்டிக் பொருள்களை வாங்குறதுக்கு அரசாங்கமோ அல்லது சமூக ஆர்வலர்களோ ஒரு வழி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று முடித்தார்.