வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (07/01/2019)

கடைசி தொடர்பு:19:15 (07/01/2019)

ஜனவரி 8, 9-ல் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் `கட்’ - அரசு ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஓய்வூதிய திட்டத்தைத் திரும்ப பெறக் கோரியும் பொதுத்துறை பங்குகளின் விற்பனையைக் கைவிட வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக முன்னதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள 15 லட்சம் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அரசு

வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநில அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழகத்தில் இருந்து மின் வாரிய சங்க ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் போன்ற பலரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 

அரசு ஊழியர்களின் இந்த மெகா போராட்டத்தால் அரசுத் துறைகளில் பெரிய நஷ்டம் ஏற்படலாம் என்றும் அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழக போக்குவரத்து முற்றிலும் முடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்கவும் மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து அனைத்து வசதிகளை ஏற்படுத்தித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அரசுப் பணிகள் பாதிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, 8, 9 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  


அன்றைய தினம் விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். அவர்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். மருத்துவ விடுமுறைகளைத் தவிர வேறு எந்த மாதிரியான விடுமுறைகளும் வழங்கப்படாது. போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தினங்களும் பணிக்கு வந்தவர்கள் மற்றும் வராதவர்களின் பட்டியலைத் தயாரித்து அன்று காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.