வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (07/01/2019)

பணம் இன்னும் வரல; சொந்தப் பணத்தை கொடுத்து போட்டோ எடுத்த அ.தி.மு.க-வினர்! - ரேஷன் கடை காட்சிகள்

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாகப் பொங்கல் பொருள்கள் தொகுப்புடன் 1,000 ரூபாய் பணம் வழங்கப்படும் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்தப் பரிசுப் பொருள்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படும். பொங்கல் பரிசு கொடுப்பதன் மூலமாக 2.1 கோடி பேர் பலன் பெறுவார்கள். குடும்ப அட்டைதாரரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ அந்தந்த ரேஷன் கடைக்கு நேரில் சென்று பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது.

பொங்கல் பரிசுப் பொருள், தாம்பரம்

முதல்வரின் அறிவிப்பின்படி பொங்கல் பரிசை வாங்குவதற்காக இன்று காலை எட்டு மணியிலிருந்தே பொதுமக்கள் கால்கடுக்கக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  தாம்பரம், திருமலைநகர், பெருங்களத்தூா், பீா்க்கன்கரணை உட்படப் பல ரேஷன் கடைகளில் மாலை 4 மணி ஆகியும் அரசு அறிவித்த பரிசுப் பொருளும் ஆயிரம் ரூபாய் பணமும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், ‘எப்போது பணம் கொடுப்பீங்க’ என ரேஷன் கடை ஊழியர்களிடம் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள். வங்கியிலிருந்து எங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் சமாளித்து வருகிறார்கள். பொதுமக்களின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் சில ரேஷன் கடை ஊழியர்கள் வந்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

பொங்கல் பரிசு ரேஷன் கடை

தாம்பரம், திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரிசுப் பொருள்களை மொத்தமாகக் கொடுக்காமல், பைகளில் உள்ள பொருள்களை எடுத்து அ.தி.மு.க-வினர் ஒவ்வொருவராகக் கொடுப்பது போலப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். அரசு அறிவித்த 1,000 ரூபாய் பணம் வராததால், சில இடங்களில் அரசியல் பிரமுகர்களே தங்களின் பணத்தைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்பு ‘ரேஷன் கடையில பணம் கொடுத்ததும் என்னோட பணத்தைத் திரும்பக் கொடுத்திடணும்’ என சிரித்துக்கொண்டே சொன்னார்கள். இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான கடைகளில் அ.தி.மு.க-வினர் வந்தபிறகுதான் பரிசுப் பொருள்கள் கொடுக்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க