`அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறோம்!’ - நீதிமன்றத்தில் கலங்கிய பொன்.மாணிக்கவேல் | ig pon manikavel filed complaint against tn government

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (07/01/2019)

கடைசி தொடர்பு:19:29 (07/01/2019)

`அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறோம்!’ - நீதிமன்றத்தில் கலங்கிய பொன்.மாணிக்கவேல்

அலுவலகமின்றி தெருவில் நிற்கிறோம் என முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இவரது ஓய்வின் நாளன்றே நீதிமன்றத்தில் நடந்த சிலைக்கடத்தல் வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலையே சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. மேலும், ஒரு வருடத்துக்குள் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கை முடிக்க வேண்டும் எனவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

பொன் மாணிக்கவேல்

இதற்கிடையே, இன்று பொன்.மாணிக்கவேல் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் ஒரு புகார் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அலுவலகமின்றி தெருவில் நிற்கிறோம்'' எனப் புகார் கூறியிருந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் அலுவலகம் இல்லாமல் இருப்பதாகப் புகார் கூறப்பட்டது. அவரது மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ``அரசுத் துறையை அரசே முடக்குவது எந்த விதத்தில் நியாயம்" எனக் கேள்வி எழுப்பியதுடன், ``நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நேரிடும். இது தொடர்பாக ஜனவரி 9-ம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் அல்லது தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் கூறி உத்தரவிட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க