`அமைச்சர் தொகுதிக்காக மாற்றப்பட்டதா அத்திக்கடவு-அவினாசி திட்டம்?' - கொதிக்கும் விவசாயிகள் | Government changed Athikkadavu Avinasi project route for the benefit of minister's constituency, alleges farmers

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (07/01/2019)

கடைசி தொடர்பு:20:45 (07/01/2019)

`அமைச்சர் தொகுதிக்காக மாற்றப்பட்டதா அத்திக்கடவு-அவினாசி திட்டம்?' - கொதிக்கும் விவசாயிகள்

அத்திக்கடவு அவினாசி திட்டம் அமைச்சர்

``கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் நீண்டகால கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கிவிட்டதாக அரசு கூறிவரும் நிலையில், அந்தத் திட்டத்தில் அமைச்சரின் தொகுதிக்காக மாற்றம் செய்துள்ளார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார்கள் கோவை விவசாயிகள்.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேணுகோபாலிடம் பேசியபோது, ``பவானி ஆற்றின் உபரி நீரை அத்திக்கடவு பகுதியிலிருந்து அவினாசி பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகத் தீட்டப்பட்டதுதான் அத்திக்கடவு - அவினாசி திட்டம். கோவை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான இந்தத் திட்டத்தை இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசுகள் நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத்ததில்லை. ஆனால், இந்த அரசு அதற்காக நிதி ஒதுக்கி டெண்டர்விடும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பதாக வரும் அறிவிப்புகள் எங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் தள்ளியது. ஆனால், இப்போது வந்துள்ள அறிவிப்பு அந்த மகிழ்ச்சியை விரட்டி வேதனையைக் கொடுத்துவிட்டது.

அத்திக்கடவு திட்டம்

இந்தத் திட்டத்தை அத்திக்கடவு பகுதியிலிருந்து செயல்படுத்துவதற்குப் பதிலாக காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்து வழங்கும் வகையில் மாற்றியுள்ளார்கள். காலிங்கராயன் கால்வாய்க்கென தனி திட்டம் இருக்கிறது. ஆனால், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைக் காலிங்கராயன் கால்வாயிலிருந்து செயல்படுத்துவது. இந்தத் திட்டத்தில் பயனடைய வேண்டிய மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன.

அத்திக்கடவு திட்டதின் தலை மடை பகுதியான இந்தப் பகுதிகளைப் புறக்கணித்து திட்டத்தை தலைகீழாக மாற்றியுள்ளார்கள். அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி பயன்பெற வேண்டுமென்பதற்காக இந்தத் திட்டத்தை மாற்றியுள்ளார்கள். இதனால், அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கான பாசனம் பொய்த்துப்போகும், பாதாளத்துக்குச் சென்றுவிட்ட  நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த இருந்த ஒரே வாய்ப்பும் தகர்ந்துபோகும் உயரும் என்றவர். அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை மாற்றாமல் பழையபடியே செயல்படுத்த வேண்டும் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க