`திருவாரூர் இடைத்தேர்தலை தி.மு.க விரும்பவில்லை என்பதே உண்மை!’ - தமிழிசை | Tamilisai slams DMK over Tiruvarur Byelection

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (07/01/2019)

கடைசி தொடர்பு:19:52 (07/01/2019)

`திருவாரூர் இடைத்தேர்தலை தி.மு.க விரும்பவில்லை என்பதே உண்மை!’ - தமிழிசை

 தேர்தல் ஆணையம்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அதேபோல அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தன. இந்த நிலையில் திடீரென திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு சில அரசியல் கட்சிகள் ஆதரவும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

தமிழிசை சௌந்திர ராஜன்

குறிப்பாக, திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பி.ஜே.பி- தான் காரணம். `தனது அதிகார செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்திவிட்டதாக' அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் கூறி வருகின்றனர். அது மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பைத் தொடர்ந்தே தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பரவலாகப் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து தமிழிசை சௌந்தரராராஜனிடம் கேட்டோம்.``தி.மு.க கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா தேர்தலை ரத்து செய்யுமாறு ஆரம்பத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குக்காக வாதாட கபில் சிபில் களம் இறங்கத் தயாராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதோடு தேர்தல் ஆணையத்திடமும் தேர்தலை ரத்து செய்யுமாறு மனு அளித்திருந்தார். இந்த விவரம் தி.மு.க-வுக்குத் தெரியாதா. திருவாரூர் இடைத் தேர்தலை விரும்பவில்லை என்றாலும் கண்துடைப்புக்காக வேட்பாளரை அறிவித்து நியாயமாக நடப்பது போன்று காட்டிக்கொண்டது தி.மு.க தலைமை. குறிப்பாக, திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறுவதை தி.மு.க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

எனவே, திருவாரூர் தேர்தல் ரத்தாவதற்கு மறைமுகமாகப் பேக் டோர் வேலை பார்த்ததும் தி.மு.க-தான். காரணம் தொடர்ந்து அந்தத் தொகுதியில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளார். தற்போது புதிய வேட்பாளர் களம் இறக்கியுள்ளதால் தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற கௌரவ அச்சம் தி.மு.க-வுக்கு உள்ளது. எனவே, தி.மு.க-வின் இந்த உள்ளடி வேலை அனைவருக்கும் தெரிந்ததே. அதே போன்று  டி.டி.வி.தினகரன் தரப்பும் ஒரு கணக்குப் போட்டு வந்தது. நிவாரணத்தைக் காரணம் காட்டி  இந்தத் தேர்தலிலும் எப்படியாவது தொகுதியைக் கைப்பற்றிவிடலாம் என எண்ணியிருந்தது. எனவே, இந்தத் தேர்தல் ரத்தானத்துக்கு பி.ஜே.பி காரணம் அல்ல. மற்ற கட்சிகள்தான் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.