`தமிழக அரசு நன்றாகச் செயல்பட்டு வருகிறது!’ - எஸ்.வி.சேகர் | TN government doing good, says S.ve.Sekar

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:21:36 (07/01/2019)

`தமிழக அரசு நன்றாகச் செயல்பட்டு வருகிறது!’ - எஸ்.வி.சேகர்

`ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் கருத்தை ஃபார்வர்ட் செய்தேன். அதில் என்னுடைய கருத்தோ, என்னுடைய எழுத்தோ இல்லை’’ என்று முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர்

கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள சதாசிவப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய கரூர் வருகை தந்தார் எஸ்.வி.சேகர். அதன் பின்னர் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், `கரூர் கலெக்டர் அன்பழகன் என் நண்பர். அதனால், மரியாதை நிமித்தமாகவே சந்திக்க வந்தேன் என்று தெரிவித்தார்.

பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், ``என்மீது கரூர் கோர்ட்டில் பெண் பத்திரிகையாளரை சமூக வலைதளங்களில் இழிவாகக் கருத்து பரப்பினேன் என்று அவதூறு வழக்கு போட்டுள்ளார்கள். இதுகுறித்து நான் ஏற்கெனவே தெளிவாக விளக்கியுள்ளேன். ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் கருத்தை ஃபார்வர்ட் செய்தேன். அதில் என்னுடைய கருத்தோ, என்னுடைய எழுத்தோ இல்லை. சட்டத்தை மதிப்பவன் நான். அதனால், அந்த வழக்கு சம்பந்தமாகச் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். ஒரே வழக்கு 5, 6 நீதிமன்றங்களின் நடப்பதால், அதை ஒரே நீதிமன்றத்தில் மாற்றுவதற்கு வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து வருகிறேன். 

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்காத நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலைத் தள்ளி வைத்ததை வரவேற்கிறேன். எந்தத் தேர்தலிலும் நான் சீட்டு கேட்டு நிற்பதில்லை. கட்சி கேட்டுக்கொண்டால், நான் தேர்தலில் நிற்பேன். அதுவும் தென்சென்னை தொகுதியை ஒதுக்கித் தர வேண்டும்.

தமிழக அரசு நன்றாகச் செயல்பட்டு வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. மத்திய அரசின் உதவியோடுதான் மாநில அரசு செயல்பட வேண்டும். தமிழ்நாடு என்பது தனிநாடு அல்ல. இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு; அவ்வளவுதான். தமிழக மக்களுக்கு எதிரியாக பி.ஜே.பி அரசு செயல்படுகிறது என்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கேரளாவில் மதசார்பற்ற பின்னணியோடு செயல்பட வேண்டிய பினராயி அரசு, மதவெறியோடு செயல்படுகிறது’’ என்றார்.

எஸ்.வி.சேகர் மீது கரூரில் வழக்கு தொடுத்துள்ள பாண்டியன் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனோடு...

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தவறான கருத்தைப் பரப்பிய நபரின் தகவலை ஃபேஸ்புக்கில் பரப்பினார் என்று எஸ்.வி.சேகர் மீது கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் கரூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பலமுறை நீதிபதி கோர்ட்டில் நேரில் ஆஜராக சொல்லியும், ஆஜராகாமல் எஸ்.வி.சேகர் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், `தலைமறைவாக இருக்கிறார்' என்று சொல்லப்பட்ட எஸ்.வி.சேகர் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாவட்டக் கலெக்டரைச் சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.