வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (07/01/2019)

கடைசி தொடர்பு:21:45 (07/01/2019)

கடலில் பழுதாகி நின்ற படகு! - புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து குப்புசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சதீஷ், தர்மராஜ், அஜீத், ராமு ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த சனிக்கிழமை (ஜனவரி 5) கடலுக்குச் சென்ற இவர்கள் மீன்பிடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், நடுக்கடலில் படகு பழுதானதால் கரை திரும்பவில்லை.
கரை திரும்பாத இந்த மீனவர்கள் படகை சரி செய்யும் முயற்சியில் இன்று வரை ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களையும், அவர்களது படகையும் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை காரை நகர் கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் இவர்கள் போலீஸார் மூலம் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைச் சிறையில் உள்ளனர். இவர்களுடன் இன்று மேலும் 4 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பில் மெரிகானா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் பொங்கல் தினத்துக்குள்ளாக இந்த மீனவர்களைச் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.