இந்தியில் பேசியதைக் கிண்டல் என நினைத்து கொலை! - கோவை இளைஞருக்கு ஆயுள் தண்டனை | Court orders life imprisonment to coimbatore youngster in murder case

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (07/01/2019)

கடைசி தொடர்பு:22:15 (07/01/2019)

இந்தியில் பேசியதைக் கிண்டல் என நினைத்து கொலை! - கோவை இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இந்தியில் பேசியதை, கிண்டல் செய்ததாகத் தவறாக நினைத்து உத்தரப்பிரதேச மாநில இளைஞரைக் கொலை செய்த வழக்கில், கோவை இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் ராஜா

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகேல் இந்திரபால், அமித் குமார் ஆகியோர் கோவையில் பெட்சீட் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு குனியமுத்தூர் பகுதியில் கார்த்திக் ராஜா என்பவரிடம் சாப்பிடுவதற்காக ஹோட்டல் கேட்டு விசாரித்துள்ளார் சுகேல். அதற்கு கார்த்திக் ராஜா, “காசை என்னிடம் கொடு ஹோட்டலுக்கு நான் கூட்டிட்டு போறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு, சுகேல், “எதற்காக இவரிடம் காசு கொடுக்க வேண்டும். நாமே ஹோட்டலைத் தேடிக்கொள்ளலாம்” என்று தனது நண்பர் அமித் குமாரிடம் சிரித்துக்கொண்டே சொல்லியுள்ளார். இதனிடையே, அவர்கள் இந்தியில் பேசியதை, தன்னைக் கிண்டல் செய்கின்றனர் என்று தவறாகப் புரிந்துகொண்ட கார்த்திக் ராஜா. “இந்தியில் திட்டுறியாடா சாகுடா” என்று சொல்லி ஆத்திரத்தில் அங்கு இருந்த கட்டையை எடுத்து சுகேலின் தலையில் அடித்துள்ளார்.

சிறை

இதில் சுகேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாகக் குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக் ராஜா மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கோவை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கார்த்திக் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.