வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (07/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (07/01/2019)

`சாகும்வரை எழ மாட்டோம்! - நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்

கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை பெற்றுத் தரக் கோரி விருத்தாசலத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாச்சலம்

பாலகரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையைக் கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இதில் 2016-17 மற்றும் 2017 -18-ம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரையத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகத்திடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும், ஐந்து ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பாக்கித் தொகை சுமார் ரூபாய் 93 கோடியை உடனே வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு  கூறுகையில், ``அரசு ஊழியர்களுக்கு ஒரே ஒரு மாத பணத்தை நிறுத்தினால் தமிழ்நாடு இயங்குமா. ஆனால் 23 மாதமாகக் கரும்பு விவசாயிகளுக்கு இன்னும் கரும்புக்கு உரிய பணத்தை ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட கலெக்டர், விருத்தாசலம் சப் கலெக்டர், சர்க்கரை ஆலை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையை பெற்றுத் தரவேண்டும். கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காததால் கடலூர் மாவட்டத்தில் 85,000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி தற்பொழுது 25,000 ஆகக் குறைந்துவிட்டது. விவசாயிகளின் வாழ்வா சாவா என்பதுதான் காத்திருப்புப் போராட்டத்தின் நோக்கமாகும். எங்களுக்கு ரூ.40 கோடி பாக்கியையும் ரூ.55 லட்சம் ஊக்கத் தொகையையும் வழங்கவில்லை என்றால் சாகும் வரை இங்கேயே காத்திருப்போம். இந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே மாட்டோம். மாவட்டக் கலெக்டர் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.