அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாலகிருஷ்ணா ரெட்டி! - சிறைத் தண்டனையால் முடிவு | tn minister balakrishna reddy resign his post

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (07/01/2019)

கடைசி தொடர்பு:21:24 (07/01/2019)

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாலகிருஷ்ணா ரெட்டி! - சிறைத் தண்டனையால் முடிவு

போலீஸ் ஜீப் எரிப்பு வழக்கில் 3 வருடச் சிறைத் தண்டனைப் பெற்றதை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாலகிருஷ்ணா ரெட்டி.

பாலகிருஷ்ணா ரெட்டி

1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக போலீஸுக்கு எதிராக ஜீமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடக எல்லையில் உள்ள பாகலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.

அதில், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டவர்கள் அறிவிக்கப்பட்டனர். பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 வருடம் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தண்டனையை எதிர்த்து நாளை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மக்கள் பிரதிநிதி ஒருவர் இரண்டு ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் அவர் வகித்து வரும் பதவி பறிக்கப்படும். இந்த அடிப்படையில் பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வந்தது.

கூடவே நீதிமன்ற தீர்ப்பைக் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் பாலகிருஷ்ணா ரெட்டியை பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், இன்று மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாலகிருஷ்ணா ரெட்டி. மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதலமைச்சர் வாயிலாக அவர் அனுப்பியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாலகிருஷ்ணா ரெட்டி சந்தித்துப் பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க