வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (07/01/2019)

கடைசி தொடர்பு:22:15 (07/01/2019)

பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமா ஏற்பு! - அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கூடுதல் பொறுப்பு

விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்ததை அடுத்து, அவரது துறையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கே.ஏ.செங்கோட்டையன்

1998ல் ஓசூர் அருகே நடைபெற்ற கள்ளச்சாராயத்துக்கு எதிரான போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. பாகலூர் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதோடு, போலீஸ் வாகனங்களும் தீக்கரையாக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. இக்கலவரம் தொடர்பாக 108 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இதில், அப்போதைய பா.ஜ.க. பிரமுகரும், இன்றைய அ.தி.மு.க. அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டியும் ஒருவர். இவ்வழக்கில் தான், எம்.எல்.ஏ., எம்.பி-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

பாலகிருஷ்ணா ரெட்டி உடனடியாக மனு அளித்ததைத் தொடர்ந்து, தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து தற்காலிக நிவாரணத்தை சிறப்பு நீதிமன்றம் அளித்தது. ஆனால், வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அவர் சிறை செல்வதிலிருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார். 

லில்லி தாமஸ் வழக்கில், இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஒருவரது எம்.எல்.ஏ., எம்.பி. பதவி தானாகவே ரத்தாகிவிடும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது நிறுத்தி வைக்கப்படாத வரை, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை மட்டுமே வைத்து பதவியில் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி, மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பாலகிருஷ்ண ரெட்டியின் எம்.எல்.ஏ. பதவி போனது போனதுதான் என்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்த நிலையில், தனது அமைச்சர் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தப்பிக்க வழியில்லை என அரசு வழக்கறிஞரும், தலைமைச் செயலாளரும் எடப்பாடியிடம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பதவியை ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து அமைச்சராகும் எதிர்பார்ப்பில் உள்ள பல எம்.எல்.ஏ-க்கள், அந்தப் பொறுப்பைத் தங்களுக்கு ஒதுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவருக்கே கூடுதல் பொறுப்பாக பாலகிருஷ்ணா ரெட்டியின் துறையை ஒதுக்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அல்லது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், இவர்களில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமாவை ஏற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை செங்கோட்டையன் கூடுதலாகக் கவனிப்பார் என்று உத்தரவிட்டிருக்கிறார்.