வெளியிடப்பட்ட நேரம்: 22:09 (07/01/2019)

கடைசி தொடர்பு:22:17 (07/01/2019)

`சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை!’ - மருத்துவர் ரிச்சர்ட் பீலே

ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தது தொடர்பாக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக, சில கேள்விகளை முன் வைத்தார். `மருத்துவர்கள் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. ஆனால், அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் எனச் சொன்னது யார்? மத்திய அரசு ஜெயலலிதாவுக்குத் தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ரிச்சர்டு பீலே

ஜெயலலிதாவின் உயிரைவிட, இந்திய மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும்" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மரணத்தில் ஏற்கெனவே பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் இவரின் குற்றச்சாட்டு பேசுபொருளானது. மத்திய அரசு உதவுவதாகக் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஏன் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கேள்விகள் எழுந்தது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து வருகிறார்.

ரிச்சர்டு பீலே

இந்நிலையில் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தது தொடர்பாக லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் அந்த வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் பேசும் ரிச்சர் பீலே, ``அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு முடிந்த அளவுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் நவம்பர் 2-ம் தேதிக்குப் பிறகு, என்னை அழைக்கவில்லை. அதேநேரம் வெளிநாடு சென்று சிகிச்சை எடுக்க ஜெயலலிதா விரும்பவில்லை’’ எனக் கூறுகிறார். 

சசிகலா

இதேபோல் அந்த வீடியோவில், ``கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியபோது அவர் மறுத்துவிட்டார். ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர். அதேபோல் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக சசிகலா உங்களிடம் ஏதும் கூறினாரா'' எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்குப் பதில் அளித்த ரிச்சர்டு பீலே, ``வெளிநாடு செல்ல வேண்டியது அவசியமா என சசிகலா என்னிடம் கேட்டார். கண்டிப்பாகப் போக வேண்டும் என நாங்கள் கூறியிருந்தால், அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அந்தச் சந்திப்பின்போது கண்டிப்பாகப் போக வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால், ஜெயலலிதாவே வெளிநாடு செல்ல விரும்பவில்லை" என்று ரிச்சர்ட் பீலே பதிலளித்திருக்கிறார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க