வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (08/01/2019)

கடைசி தொடர்பு:04:30 (08/01/2019)

‘இன்றும், நாளையும் ஒரு வாகனம் கூட இயங்காது!’- மோட்டார் வாகன சங்கத்தினர் ஆவேசம்

சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவைக் கைவிடக்கோரியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், பொதுத்துறையைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை  நடைபெறும் மறியல் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ஒரு வாகனம் கூட இயங்காது என்று மோட்டார் வாகன சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகன சங்கம்

 

சாலை போக்குவரத்து மாநில துணை தலைவர் தியாகராஜன் இதுகுறித்து பேசுகையில், ''உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனக் கூறி கடந்த 20 ஆண்டுகளாகப் பெருமுதலாளிகளும், அந்நிய முதலாளிகளும் கொள்ளையடிக்கும் கூடாரமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. கல்வியும், மருத்துவமும் விலை பேசி விற்கப்படுகிறது. குடிநீர் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை புதிய பொருளாதார கொள்கையின் பரிசாக இருக்கிறது.

காப்பீட்டு துறைகளையும், நிலக்கரி சுரங்கங்களையும் முதலாளிகள் வசம் ஒப்படைக்க சட்டத்தை திருத்தி விட்டார்கள். மத்திய அரசு கடும் எதிர்ப்புக்கு பிறகும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. விவசாயம் அழிக்கப்பட்டு கோடிக்கணக்கான கிராமப்புற மக்கள் முறைசாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டு எவ்வித சமூக பாதுகாப்பும் இன்றி நகர வீதிகளில் தள்ளாடுகிறார்கள்.
தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றவும், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்ற சமூக நலத்திட்டங்களை அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் தொழிலை கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கச் சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா 2015என்ற புதிய சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்கிறது.


இந்த சட்டம் நிறைவேற்றினால் அரசு போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்தையும், சரக்கு போக்குவரத்தையும் கார்ப்பரேட்டுகளே இயக்கும். கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை, ஓட்டுநர் உரிமம் வழங்கும் உரிமை அரசிடம் இருக்காது. அரசு வேலை, சுய வேலைப் பறிக்கப்படும் இப்படி பேராபத்துகள் ஏற்படும். அதையடுத்து இந்திய முழுவதும் அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்றச் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு லாரி உரிமையாளர்சங்கம், தமிழ்நாடு கால்டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம், என 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். இன்றும், நாளையும் ஒரு வாகனம் கூட இயங்காது'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க