வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/01/2019)

கடைசி தொடர்பு:08:42 (08/01/2019)

‘வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு!’- வேலூர் அரசு அதிகாரிக்கு சிறைத்தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்த வழக்கில், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக உதவியாளர் மற்றும் அவரின் மனைவிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறையைச் சேர்ந்தவர் முரளி (55). வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வளர்மதி (50). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொணவட்டம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் முரளி வேலைபார்த்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அப்போதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

அதில், ரூ.3 கோடிக்கு மேல் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. முரளி மற்றும் அவரின் மனைவி வளர்மதி பெயரில் சொத்துகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கு, வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று (7-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டதால், முரளியும் அவரின் மனைவி வளர்மதியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அரசு அலுவலரான முரளிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரின் மனைவிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதைத் தவிர இருவருக்கும் தலா ரூ.2,500 அபராதமும் விதித்து, நீதிபதி பாரி உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முரளியும், பெண்கள் சிறையில் வளர்மதியும் அடைக்கப்பட்டனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அரசு அலுவலருக்கும் அவரின் மனைவிக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது, அரசுத்துறை அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.